×

வழக்கு நிலுவையில் இருக்கும்போது பெரியார் பல்கலை சிசிடிவி காட்சிகள் அண்ணாமலைக்கு கிடைத்தது எப்படி? விசாரணை நடத்த சங்கங்கள் வலியுறுத்தல்

சேலம்: வழக்கு நிலுவையில் இருக்கும்போது பெரியார் பல்கலை சிசிடிவி காட்சிகள்,பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு கிடைத்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆசிரியர், தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீது கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளார். மேலும், தலைமறைவாக இருக்கும் பதிவாளர் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சில ஆவணங்களை காட்டி, துணைவேந்தர் மீது கைது நடவடிக்கை எடுத்தது தவறு எனக்கூறினார். இதற்கு பல்கலை ஆசிரியர் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் கூறுகையில், ‘பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளிக்கும்போது, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நியாயமானவர் எனக்கூறியிருக்கிறார். அவர் தெரிந்து சொன்னாரா?, தெரியாமல் சொன்னாரா? எனத்தெரியவில்லை. கடந்த இரண்டரை ஆண்டாக துணைவேந்தர் மீது நாங்கள் குற்றச்சாட்டை கூறி வருகிறோம். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பெரியார் பல்கலைக்கழக சிசிடிவி வீடியோ காட்சிகள், சில ஆவணங்கள் எப்படி அவருக்கு கிடைத்தது. துணைவேந்தரின் ஜாமீன் ரத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, இந்த பல்கலைக்கழக சிசிடிவி காட்சிகள் முக்கிய சாட்சியாக விளங்கும். அப்படி இருக்கையில் எப்படி அண்ணாமலைக்கு கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

* 5 பேர் ஆஜர்
பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுப்பிரமணியபாரதி, ஜெயராமன், ஜெயக்குமார், நரேஷ்குமார், அந்த பல்கலையின் விருந்தினர் மாளிகையின் பொறுப்பாளர் நந்தீஸ்வரன் ஆகியோர் நேற்று கருப்பூர் காவல் நிலையத்தில், சூரமங்கலம் உதவி ஆணையாளர் நிலவழகன் முன்னிலையில் ஆஜராகினர். அப்போது அவர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அடுத்தகட்டமாக மேலும், தனியார் நிறுவனத்தின் நிர்வாகி சசிகுமார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 8 நபர்களுக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post வழக்கு நிலுவையில் இருக்கும்போது பெரியார் பல்கலை சிசிடிவி காட்சிகள் அண்ணாமலைக்கு கிடைத்தது எப்படி? விசாரணை நடத்த சங்கங்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Periyar University ,Salem ,BJP ,president ,Booter Foundation ,Salem Periyar University ,Dinakaran ,
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ராமதாஸ் கண்டனம்..!!