×

ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்க்கும்போது உரிமையாளரின் சாதிப்பெயரை அறிவிக்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஜல்லிக்கட்டில் காளைகள் அவிழ்க்கப்படும்போது அதன் உரிமையாளர்களின் சாதிப்பெயரை அறிவிக்கக்கூடாது என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை, மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு ேபாட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. இந்த போட்டியில் வாடிவாசலில் காளைகள் அவிழ்க்கப்படும்போது சாதி பெயர் இடம்பெறக்கூடாது என்றும் மதரீதியிலான எந்த செயல்களும் நடைபெறக்கூடாது என்று கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், இந்த உத்தரவை யாரும் பின்பற்றுவதில்லை. அரசு அதிகாரிகள் முன்பே சாதிப்பெயர்களை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படுகின்றன. இது உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். எனவே, அந்த போட்டியில் காளைகளை அவிழ்க்கும்போது உரிமையாளர்களின் பெயருடன் சாதியை சேர்த்து குறிப்பிட்டு அழைக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கே.கண்ணன் ஆஜராகி, ‘அனைத்து தரப்பினரும் பங்கேற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது சாதியை குறிப்பிட்டு அழைப்பது பாகுபாடு பார்க்கும் வகையில் உள்ளது’’ என்றார். அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ‘‘சாதியை குறிப்பிடுவது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக பின்பற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காளைகளின் உரிமையாளர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்படும். சாதி அடையாளம் மற்றும் அடைமொழி பெயர்கள் அறிவிக்கப்படாது. இதை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், சாதிப்பெயர்களை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவை பின்பற்றியும், தீண்டாமை உறுதிமொழி எடுப்பது தொடர்பான மனுதாரர் கோரிக்கையை அரசு தரப்பில் பரிசீலிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தனர்.

* 15ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
வருகிற 15ம் தேதி (திங்கள்) அவனியாபுரத்திலும், 16ம் தேதி (செவ்வாய்) பாலமேட்டிலும், 17ம் தேதி (புதன்) அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்க்கும்போது உரிமையாளரின் சாதிப்பெயரை அறிவிக்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,ICourt ,Madurai ,C. Selvakumar ,Managiri, Madurai ,Tamil Nadu ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...