×

பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு எந்த தடையும் இருக்காது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கடலூர்: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு எந்த தடையும் இருக்காது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். கடலூர் நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இது கடந்த 2015ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட பொய் வழக்கு. சட்டப்படி நீதிமன்றத்தில் உரிய முறையில் எதிர்கொள்வோம். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். அதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது.

முதல்வர் வழங்கும் நிதி தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதற்கு காரணமாக உள்ளது. மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம், மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை, டீசல் மானியம் போன்ற நிதியின் மூலம் தான் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் போட முடிகிறது. பக்கத்தில் இருக்கும் கேரளாவிலோ, ஆந்திராவிலோ எத்தனை மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் போடுகிறார்கள் என விசாரித்தால் அறிவார்கள். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த துறை சீரழிந்து கிடந்தது. டீசல் விலை உயர்ந்த போதும், மற்ற மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் உயர்ந்த போதும் நமது மாநிலத்தில் உயர்த்தவில்லை.

பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள். பொங்கலுக்கு பிறகு அவர்களுடன் பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படும். ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலிருந்து வழங்கவில்லை. அவர்கள் ஆட்சியில் நிறுத்திவிட்டு இப்போது திமுக ஆட்சியில் அந்த சுமையை தூக்கி வைப்பதற்கு அதிமுக அரசியல் நாடகம் போடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல எந்த தடையும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு எந்த தடையும் இருக்காது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Minister ,Shivashankar ,Cuddalore ,Transport Minister ,Sivashankar ,Cuddalore court ,
× RELATED திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்