×

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான சாலைகள், தெருக்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம்: போர்ட் கிளப்பில் சதுரஅடி ரூ.28,500 நிர்ணயம்; பதிவுத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புளை இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை, அதாவது அடிநிலம் பொருத்து பிரிபடாத பாகத்திற்கு கிரையமாக ஓர் ஆவணமாகவும் கட்டிடப் பகுதியைப் பொறுத்து, கட்டுமான உடன்படிக்கையாக ஓர் ஆவணமாகவும் இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை மாற்றப்பட்டு கடந்த டிச.1ம் தேதி முதல் ஒரே பத்திரம் பதிவு செய்ய பதிவுத் துறை உத்தரவிட்டது. இந்த பதிவின்போது ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் சந்தை மதிப்பு அடிப்படையில், நிலம், கட்டிடத்தின் மதிப்புகளை சேர்த்து, வீட்டுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும். கூட்டு மதிப்பை நிர்ணயிக்கும் அதிகாரம், அந்தந்த மண்டல டிஐஜிக்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஏற்ற வகையில், மூன்று விதமான கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும்.

அடிப்படை கூட்டு மதிப்பு, ‘பிரீமியம்’ கூட்டு மதிப்பு, ‘அல்ட்ரா பிரீமியம்’ கூட்டு மதிப்பு என மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டது. இந்த கூட்டு மதிப்பு நிர்ணய முறையை மாற்ற வேண்டும் என கட்டுமான துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து ஒரு தெருவுக்கு ஒரே மாதிரியான கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படும் என பதிவுத்துறை அறிவித்தது. இந்த கூட்டு மதிப்பு அந்தந்த மண்டலத்தின் துணை பதிவுத்துறை தலைவர்களால் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான சாலைகள் மற்றும் தெருக்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் மற்றும் சாலைகளுக்கான கூட்டு மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பு பதிவுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்ய பொதுமக்களிடம் மேற்கொள்ளப்படும் கள ஆய்வு, கட்டுமான நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் மூலமாகவும் கண்டறியப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்தினைப் பொறுத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு அக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெரு, சர்வே எண்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என அந்தந்த மண்டலத்தின் துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு அறிவுத்தப்பட்டது.

அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான சாலைகள் மற்றும் தெருக்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டமுடியாத தெருக்களை மற்ற இடங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அடையாறு போட் கிளப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் ஒரு சதுர அடிக்கு ரூ.28,500 ஆகவும், மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு சதுர அடி ரூ.15,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் முத்தியால்பேட்டை, தம்பு தெரு முதல் மூக்கர் நல்லமுத்து தெரு வரை ஒரு சதுர அடிக்கு ரூ.16,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதியான தாம்பரத்தில் ரூ.3,800ல் தொடங்கி சுமார் ரூ.6,000 வரை உள்ளது. பதிவுக் கட்டணம் கூட்டு மதிப்பில் 7 சதவீதமாக கணக்கிடப்படும். அடிப்படை அடுக்குமாடி வளாகத்தில் உள்ள குறைந்த கட்டணத்தின் அடிப்படையில் கூட்டு மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. முன்பிருந்த மதிப்புடன் ஒப்பிடும் போது தற்போது உள்ள மதிப்பு குறைவு. சில கட்டுமான நிறுவனங்கள் புதிய கட்டணங்கள் குறித்து தங்களுக்கு புகார்கள் இல்லை, ஆனால் முத்திரையின் மதிப்பை 7ல் இருந்து 4 சதவீதமாக ஆக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு பதிவில்
சென்னையின் முக்கிய பகுதிகளிள் கூட்டு மதிப்பு:
பகுதி நிர்ணயிக்கப்பட்ட கூட்டு மதிப்பு (ஒரு சதுர அடிக்கு)
ஆழ்வார்பேட்டை ரூ.10000
பெசன்ட் சாலை ரூ.12000
போட் கிளப் சாலை ரூ.28,500
கதீட்ரல் சாலை ரூ.16,000
செனடாப் சாலை ரூ.16,000
சேமியர்ஸ் சாலை ரூ.16,000
சித்தரஞ்சன் சாலை ரூ.14,000
எல்டாம்ஸ் சாலை ரூ.14,000
கோபாலபுரம் ரூ.15,000
கோடம்பாக்கம் நெடுஞ்சாலை ரூ.15,000
நந்தனம் ரூ.13,000
போயஸ் கார்டன் ரூ.28,500
ராயப்பேட்டை நெடுஞ்சாலை ரூ.14,000
சீத்தம்மாள் காலனி ரூ.13,000
டிடிகே சாலை ரூ.17,000
நுங்கம்பாக்கம் லேக் ஏரியா ரூ.13,000
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை ரூ.15,000
கிரீம்ஸ் சாலை ரூ.15,000
ஸ்டெர்லிங் சாலை ரூ.15,000
அண்ணாசாலை ரூ.20,000
எல்லீஸ் சாலை ரூ.9,500
ஜெனரல் பேட்டர்ஸ் (ஜி.பி. சாலை) ரூ.15,000
வாலாஜா சாலை ரூ.15,000
புரசைவாக்கம் ரூ.7000 முதல் 13,000 வரை
அரும்பாக்கம் ரூ.7000 முதல் 12,500 வரை
பெரம்பூர் ரூ.4000 முதல் 8,000 வரை
வில்லிவாக்கம் ரூ.7000 முதல் 15,000 வரை
பாடி ரூ.7000 முதல் 15,000 வரை
மயிலாப்பூர் ரூ.7000 முதல் 28,500 வரை
அமைந்தகரை ரூ.6000 முதல் 12,500 வரை
கோயம்பேடு ரூ.7000 முதல் 15,000 வரை
திருமங்கலம் ரூ.6000 முதல் 15,000 வரை
ஈக்காட்டுத்தாங்கல் ரூ.8000
சைதாப்பேட்டை ரூ.5500 முதல் 9000 வரை
திருவான்மியூர் ரூ.11,000 முதல் 15,000 வரை
தியாகராய நகர் ரூ.8000 முதல் 19,500 வரை
சோழிங்கநல்லூர் ரூ.4500 முதல் 7500 வரை
நீலாங்கரை ரூ.7000
ஈஞ்சம்பாக்கம் ரூ.6000
வேளச்சேரி ரூ.6000 முதல் 7500 வரை
தண்டையார்பேட்டை ரூ.5000 முதல் 9000 வரை
கொளத்தூர் ரூ.7000
திருவொற்றியூர் ரூ.5000 முதல் 7000வரை
அம்பத்தூர் ரூ.6000 முதல் 9000வரை

The post தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான சாலைகள், தெருக்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம்: போர்ட் கிளப்பில் சதுரஅடி ரூ.28,500 நிர்ணயம்; பதிவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Port Club ,Chennai ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...