×

அரசு பள்ளிகளில் நேரடியாக 1500 ஆசிரியர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் நேரடியாக 1500 இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.8.2022ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 1000 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து கடந்த 22.8.2023ல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த காலிப் பணியிடங்களை 2023-24ல் நிரப்புவதற்கான நபர்களை தெரிவு செய்யவும், மேற்கண்ட அரசாணைப்படி அனுமதிக்கப்பட்ட 1000 பணியிடங்கள் தவிர மீதம் உள்ள பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க தொடக்க கல்வி இயக்குநர் அரசிடம் கேட்டுள்ளார்.

தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2023-24ல் கண்டறியப்பட்ட 8,643ல் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட 1000 பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப தொடக் கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. இதன்படி, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பால் அனுமதிப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.

தற்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் நபர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நபர்களை முதலில் நியமனம் செய்யும் போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் என்னும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவித்துள்ளார்.

The post அரசு பள்ளிகளில் நேரடியாக 1500 ஆசிரியர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Teacher Selection Board ,Secretary of School Education ,Kumaragurubaran ,Panchayat Union ,Dinakaran ,
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணி கூடுதலாக 610 இடங்கள் வெளியீடு