×

2 மனு கொடுத்தும் ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் தராததால் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க முடிவு: ரூ.37,907 கோடி நிதி உடனே ஒதுக்க வலியுறுத்துகிறார்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் நிகழ்ந்த இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்கள் தொடர்பாக 2 மனுக்கள் கொடுத்தும் ஒன்றிய அரசிடம் இருந்து இதுவரை எந்தவொரு நிவாரண நிதியும் வழங்கப்படாததால், தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்பிக்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் ‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை பெய்தது. அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொதுமக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழை பொழிவின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களுக்கும் ஒன்றிய அரசிடம் இருந்து நிவாரண தொகையாக தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.37,907.19 கோடி ஏற்கனவே கோரியுள்ளது. இது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 19,692.67 கோடி ரூபாயும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 18,214.52 கோடி ரூபாயும் உள்ளடக்கியதாகும். ‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் எற்பட்ட கடுமையான பாதிப்புகளை ஒன்றிய குழுவினர் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் வந்து பார்வையிட்டு சென்றனர். அதோடு, ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழ்நாட்டிற்கு வந்து, மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை டிசம்பர் 7ம் தேதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து உரிய நிவாரண தொகையை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அதேபோன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட பெரும் பாதிப்புகளை ஒன்றிய குழுவினர் டிசம்பர் 20ம் தேதி நேரில் பார்வையிட்டனர். ஒன்றிய குழுவினர் இந்த மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்திட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்து தந்தது. இதுமட்டுமின்றி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 26ல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக குறிப்பிட்டு, சேதங்கள் குறித்த தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்தார்.

ஆனால், ஒன்றிய குழுக்களின் வருகைக்கு பின்னரும், ஒன்றிய அமைச்சர்கள் பார்வையிட்டதற்கு பிறகும், நிவாரண தொகை கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் 2 கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், ஒன்றிய அரசிடம் இருந்து இதுவரை நிவாரண பணிகளுக்கென எந்தவொரு நிவாரண தொகையும் பெறப்படவில்லை. இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டபோது, குறுகிய காலத்திற்குள் ஒன்றிய அரசு நிவாரண நிதியை தேசிய பேரிடர் நிதியில் இருந்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இரண்டு பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவும், தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.2,100 கோடி செலவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பிலான வாழ்வாதார மறுகட்டமைப்பு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37,907.19 கோடியை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரணம் கோரி 2 கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
* மொத்தம் ரூ.37,907 கோடி நிவாரணம் கோரியுள்ளது.
* ஒன்றிய அமைச்சர்கள், குழுவினர் சேதங்களை பார்வையிட்டனர்.
* இதுவரை நிவாரண பணிகளுக்கென எந்தவொரு நிவாரண தொகையும் கிடைக்கவில்லை.
* மற்ற மாநிலங்களில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டபோது, குறுகிய காலத்திற்குள் ஒன்றிய அரசு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது.

The post 2 மனு கொடுத்தும் ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் தராததால் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க முடிவு: ரூ.37,907 கோடி நிதி உடனே ஒதுக்க வலியுறுத்துகிறார்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Amitshah ,Chief MLA ,K. Stalin ,Chennai ,MLAs Union ,Home Minister ,Amitsha Sandhavi ,EU government ,MPs ,Dinakaran ,
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா