×

லத்தேரி அருகே அதிகாலை மான் வேட்டையாடிய 2 பேர் துப்பாக்கியுடன் கைது

வேலூர்: லத்தேரி அருகே இன்று அதிகாலை மான் வேட்டையாடிய 2 பேரை நாட்டு துப்பாக்கியுடன் வனத்துறையினர் கைது செய்தனர். காட்பாடி அடுத்த பனமடங்கி காப்புகாட்டு பகுதியில் மான் வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் கலாநிதிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மலைக்கிராமங்களை தீவிர ரோந்து பணியில் ஈடுபட வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

வேலூர் வனச்சரகர் குமார் உத்தரவின்பேரில் லத்தேரி பிரிவு வனவர் அருணா, வனக்காப்பாளர்கள் தணிகைவேல், ஜெயசுதா, சங்கர் ஆகியோர் இன்று அதிகாலை 3 மணியளவில் கீழ்மூட்டுகூர் அடுத்த சென்றாயன்பள்ளி செம்மண்குட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியில் நாட்டு துப்பாக்கியில் புள்ளி மானை வேட்டையாடி 2 பேர் மொபட்டில் கொண்டு வந்தனர்.

அவர்களை வனத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். விசாரணையில், விரிஞ்சிபுரம் அடுத்த செதுவாலை பகுதியைச் சேர்ந்த கார்த்தி(35), சஞ்சய் (19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய மொபட் மற்றும் நாட்டுத்துப்பாக்கியை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post லத்தேரி அருகே அதிகாலை மான் வேட்டையாடிய 2 பேர் துப்பாக்கியுடன் கைது appeared first on Dinakaran.

Tags : Lateri ,Vellore ,Forest ,Panamatangi Conservation Area ,Dinakaran ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...