×

திருவில்லிபுத்தூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை; அறுவடைக்கு தயாரான நெற்பயிர் சேதம்: விவசாயிகள் கவலை: நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழைக்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையால் கண்மாய், குளங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று மாலை திடீரென பரவலாக மழை பெய்தது.

திருவில்லிபுத்தூர் நகர் பகுதியில் சாரல் மழையும், சுற்றுவட்டார பகுதியில் கனமழையும் பெய்தது. கிருஷ்ணன்கோவில் அருகே குப்பன்னாபுரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு வயலில் அறுவடைக்கு தயாராக காத்திருந்த நெற்கதிர்கள் சாய்ந்துள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ராமர் கூறுகையில்:
குப்பனாபுரம் பகுதியில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறைக்காற்று வீசியது. இதில் 4 ஏக்கரில் அறுவடைக்கு காத்திருந்த நெற்கதிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. எனவே, அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இதேபோல, பெரும்பாலான விவசாய நிலங்களிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

The post திருவில்லிபுத்தூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை; அறுவடைக்கு தயாரான நெற்பயிர் சேதம்: விவசாயிகள் கவலை: நிவாரணம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tornadoes ,Thiruvilliputur ,Virudhunagar district ,
× RELATED அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு