×

ஹால் டிக்கெட்டும் கொடுக்கல… தகவலும் சொல்லல… ஊரக திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களை அனுப்பாத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம்: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 வீதம், அடுத்த 4 வருடங்கள் உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு கடந்த 16ம் தேதி நடந்தது. இத்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பாமல் அலட்சியமாக செயல்பட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு 19 மையங்களில் ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது. இதில், தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு 289 மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று காலை தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக, தேர்வுக்கூடங்களுக்கு சென்ற அறை கண்காணிப்பாளர்கள், மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் கட்டுகளை பிரிக்க முயன்றனர். அப்போது குறிப்பிட்ட 2 தேர்வறையில் ஒரு மாணவர் கூட இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட 2 அறைகளும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 38 மாணவ, மாணவிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், அப்பள்ளியிலிருந்து ஒருவர் கூட தேர்வுக்கு வராதது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது தேர்வு நடைபெறுவது குறித்து மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்காததுடன், தேர்வுக்கான ஹால்டிக்கெட் கூட விநியோகம் செய்யாமல் இருந்தது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் சரவணக்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஹால் டிக்கெட்டும் கொடுக்கல… தகவலும் சொல்லல… ஊரக திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களை அனுப்பாத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...