×

திருக்குறள் ஆசிரியர்!

நன்றி குங்குமம் தோழி

திருக்குறளில் இருக்கும் கருத்துகள் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்றும், திருக்குறள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் திருக்குறளை எழுதி சாதனை படைத்து வருகிறார் ஆரணியை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் உமாராணி. கடந்த ஒரு வருடமாக இவர் திருக்குறளை மையப்படுத்தியே பல சாதனைகள் செய்ததோடு சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆரணியில். பள்ளிக்கூடம் படிக்கும் போது நான் எல்லா போட்டிகளிலும் ஆர்வமாக கலந்து கொள்வேன். நன்றாக படிக்கவும் செய்வேன். பள்ளி காலத்தில் இருந்தே எனக்கு ஆசிரியராக வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. கல்லூரி படித்து முடித்ததும் நான் ஆசிரியர் பயிற்சிக்கு சேர வேண்டும் என வீட்டில் சொன்ன போது அவங்க அதை ஏற்காமல் என்னை கல்யாணம் செய்து கொண்டு படி என்று சொன்னாங்க. ஆனால் நான் ரொம்பவே பிடிவாதமாக இருந்தேன்.

இதனால் மூன்று நாட்கள் சாப்பிடாமல் தர்ணா எல்லாம் செய்தேன். என்னுடைய பிடிவாதத்தைப் பார்த்த என் பெற்ேறார் என்னை ஆசிரியர் பயிற்சியில் சேர்த்து விட்டாங்க. ஆசிரியர் பயிற்சி முடிந்ததும் கல்யாணம் ஆனது. அதன் பின்னர் எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். அப்போது நான் எம்.ஏ. எம்ஃபில் படித்துக் கொண்டு இருந்தேன். காலை வேளையில் குழந்தைகள் மற்றும் வீட்டு வேலை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். அதனால் இரவு நேரத்தில் தான் நான் படிப்பேன். அப்படி படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தான் நான் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். நான் இப்போது ஆரணியில் இருக்கிற அரசுப் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கேன்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருக்கும் போது திருக்குறள் படிக்க தொடங்கினேன். எனக்கு திருக்குறளை பிடிக்கும். அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மீது அதிகமாக ஆர்வம் ஏற்பட்டது. முக்கியமாக எங்கேயும் போகாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிற சூழ்நிலையில் நமக்கு ஒரு வித வெறுப்பு இருக்கும். இந்த நேரத்தில் திருக்குறளில் இருக்கும் கருத்துகளை படிக்கும் நம்முடைய அகம் மற்றும் புறம் சார்ந்த கருத்துகள் மற்றும் ஒரு நாட்டின் அரசு மற்றும் அரசர் எப்படி இருக்க வேண்டும்.

மக்கள் எப்படி வாழ வேண்டும் என எல்லாமே கூறப்பட்டிருக்கிறது. இவை எல்லாமே என்னை ஆச்சரியப்படுத்தியது. இந்த கருத்துகளை பின்பற்றினாலே நமக்கு பாதி பிரச்னைகள் வராது. அதுவே எனக்குள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. திருக்குறள் மீதான பற்று காரணமாக தொடர்ந்து அனைத்து அத்தியாயங்களையும் படிக்க தொடங்கினேன். ஒவ்வொன்றும் படிக்க படிக்க என் ஆழ்மனதில் இனம் புரியாத பேரானந்தம் ஏற்பட்டது. திருக்குறளில் இருக்கும் கருத்துகளை நான் பின்பற்றத் தொடங்கினேன்’’ என்றவர் திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்க பல விதங்களில் முயற்சி செய்து வருகிறார்.

‘‘திருக்குறள் என்பது வாழ்வியல் நெறி. நம்முடைய வாழ்க்கை எப்படிப்பட்டது அதை எப்படி வாழ வேண்டும் என அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கருத்துகளை எல்லாம் படிப்பதோடு நிறுத்த கூடாது அதை நம்முடைய வாழ்வியலாக மாற்ற வேண்டும் என நினைத்தேன். அதில் இருக்கும் நற்கருத்துகளை எல்லாம் நான் பின்பற்ற தொடங்கினேன். திருக்குறள் அறநெறிகளை என்னுடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களையும் பின்பற்ற சொன்னேன். அதோடு எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் திருக்குறளை பற்றி பேசத் தொடங்கினேன். முக்கியமாக பள்ளிக் குழந்தைகளுக்கும் நான் திருக்குறளை படிக்க வேண்டிய அவசியத்தை சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தேன்.

இது மட்டுமில்லாமல் மக்களுக்கு திருக்குறளை சொல்லிக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த நினைச்சேன். எல்லோருக்கும் திருக்குறள் பற்றி தெரிந்திருந்தாலும் அதற்கென நேரம் ஒதுக்கி படிப்பதில்லை. இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் திருக்குறள் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. எனது வாழ்நாளில் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் 1,330 திருக்குறளை எழுதி, அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டேன். அதன் முதல் கட்டமாக, எனக்கு தெரிந்த வழிமுறையில் நான் பணியை தொடங்கினேன்.

முதன் முதலில் பீன்ஸ் விதைகளில் தான் திருக்குறளை எழுதினேன். அது சாதனையாக கருதப்பட்டது. பீன்ஸை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அது விதை என்பதால், அடுத்தடுத்து வளர்ந்து கொண்டே இருக்கும். அதன் பின்னர் குடை, அகல் விளக்கு, சிறிய மணி இவற்றிலெல்லாம் 1,330 திருக்குறளையும் எழுதும் பணியை தொடங்கினேன். பள்ளி நேரம் போக மீதி நேரங்களில் இந்த வேலைகளை செய்து வந்தேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு எனது மகள்கள் இருவரும் உறுதுணையாக இருந்து எனக்கு உதவி செய்தனர். பல கட்ட வேலைகளுக்கு பிறகு இந்த வேலையை செய்து முடித்து பலரிடமும் நான் செய்தவற்றை எல்லாம் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். இந்த வேலையை இதோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என நினைத்தேன்’’ என்றவர் ரூபாய் நாணயம், காது சுத்தம் செய்ய பயன்படுத்தும் பட்ஸ்களில் எல்லாம் திருக்குறளை எழுதியுள்ளார்.

‘‘திருக்குறளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்னுடைய பணி என்னுடன் முடிந்து விடக்கூடாது என்பதால், என் மாணவிகளையும் திருக்குறளை மக்களிடையே கொண்டு செல்லும் பணியை செய்ய சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறேன். அவர்களுடைய வெற்றிப் பயணம், சாதனை பயணமாக தொடர்கிறது. நான் செய்த இந்த பணியை அங்கீகரித்து, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்ற அமைப்புகள் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தன.

இந்த பூலோகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் பிறந்த நாள் முதல் கல்வி, வேலை, பணம், குடும்பம் என அடுத்தடுத்து எதையாவது ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் அவர்களுடைய உடல் நலம் மீதும் யாரும் அக்கறை கொள்வதில்லை. ஒரு மனிதனுக்கு உடல் நலம் மிகவும் முக்கியமானது. இவ்வாறு நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களைப் பற்றி திருவள்ளுவர் தன் குறள் மூலமாக எடுத்துரைத்துள்ளார். இதனை மேற்கோள்காட்டித்தான், என் மாணவ செல்வங்களை வழிநடத்தி வருகிறேன். அவர்களும், என்னுடன் இணைந்து பயணிக்கின்றனர்” என்றார் உமாராணி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post திருக்குறள் ஆசிரியர்! appeared first on Dinakaran.

Tags : Tirukkural ,dothi Umarani ,Arani ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு