×

தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் இரும்பு வியாபாரி கொலை; ஆந்திராவில் உள்ள கார் டிரைவரை பிடிக்க போலீஸ் தனிப்படை விரைவு

பெரம்பூர்: சென்னை அண்ணாநகர் ஆர்டிஓ அலுவலகம் அருகே கடந்த 2ம்தேதி அதிகாலை 1.30 மணி அளவில் பைக் மீது கார் மோதியதில் பைக்கை ஓட்டிவந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் காரில் வந்த 2 பேர் காரை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் அயனாவரம் தந்தை பெரியார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (37) என்பதும் வில்லிவாக்கம் பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. முதலில் சாதாரண விபத்து என்று நினைத்து விசாரித்தனர்.இந்தநிலையில், உயிரிழந்த பிரேம்குமாருக்கு சன் பிரியா (32) என்ற மனைவியும் கீர்த்தனா, ஓவியா என்ற 2 மகள்களும் இருப்பது தெரிந்தது. விபத்து என போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியபோது பிரேம்குமாரின் சகோதரி சங்கீதா என்பவர் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில், “எனது சகோதரர் பிரேம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது’’ என்று தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது சன்பிரியாவின் நடத்தையிலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதில் சன்பிரியாவுக்கு அயனாவரம் செட்டி தெருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (30) என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. ஹரிகிருஷ்ணன் ஆந்திராவை சேர்ந்த நண்பர் சரத்குமாரின் உதவியுடன் பழைய காரை வாங்கி அதன்மூலம் இருவரும் சேர்ந்து பிரேம்குமாரை கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று சன்பிரியா, ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கை அயனாவரம் போலீசாருக்கு மாற்றினர். இதன்பிறகு சன் பிரியாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது,’’சன் பிரியா, ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் தகாத உறவுக்கு பிரேம்குமார் தடையாக இருந்துள்ளதால் அவரை தீர்த்துக்கட்டுவதற்காக இரண்டுபேரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்காக 6 லட்சம் ரூபாய் வரை சன்பிரியா ஹரிகிருஷ்ணனுக்கு கொடுத்துள்ளார்’ என்று தெரியவந்துள்ளது.இதையடுத்து போலீசார் ஹரிகிருஷ்ணனை வைத்து ஆந்திராவுக்கு சென்றுள்ள கார் டிரைவர் சரத்குமாரிடம் நேற்று மாலை வரை பேசி வந்துள்ளனர். அப்போது ஹரிகிருஷ்ணன், ‘’தனக்கு பயமாக உள்ளது. யாராவது கண்டு பிடித்து விடுவார்களா என பயப்படுவதுபோல ஹரிகிருஷ்ணனை பேச வைத்துள்ளனர். அதற்கு சரத்குமார், ‘’இதுசாதாரண விபத்து வழக்குதான் முதலில் போலீசார் விபத்து ஏற்படுத்தியது யார் என கண்டுபிடிக்கட்டும். இதன் பிறகு வழக்கறிஞரை வைத்து வழக்கை நடத்திக் கொள்ளலாம். நீ எதற்கும் பயப்படாதே’’ என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே சமூக வலைதளங்கள், டிவிக்களில் கொலை வழக்கு பற்றிய செய்தி பரபரப்பாக வெளிவந்ததும் நேற்றிரவு 9 மணி அளவில் சரத்குமார் தனது செல்போன் சுவிட்ச்ஆப் செய்துவிட்டார்.

இதனால் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடிக்க அயனாவரம் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். சரத்குமாரை கைது செய்தால்தான் கொலை வழக்கில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மாறுவேடத்தில் சென்ற சரத்குமார்
கொலை செய்வது என்று முடிவெடுத்த பிறகு ஹரிகிருஷ்ணன், சரத்குமார் உதவியை நாடியுள்ளார். அவர் ஆந்திராவில் இருந்து வந்து ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் பழைய கார் ஒன்றை புக் செய்துள்ளார். அந்த காரை நேரில் சென்று வாங்கும்போது சரத்குமார் தலையில் விக் வைத்துக்கொண்டுகால் உடைந்தது போன்று கட்டு போட்டுக்கொண்டு கையில் குச்சி வைத்து தாங்கி தாங்கி நடந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய பிறகு காரை குறிப்பிட்ட அந்த இடத்திலேயே விட்டுவிட்டு செல்லும்போது கார் வாங்கியது யார் என போலீசார் ஓஎல் எக்ஸ் ஐ அணுகி கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் கார் வாங்கும் இடத்தில் சிசிடிவியில் மாட்டக்கூடாது. கார் விற்பவர்கள் தன்னை அடையாளம் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக மிகவும் பிளான் செய்துள்ளனர்.

அவங்க சாப்பிட்டாங்களா?
அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு அலுவலகத்தில்வைத்து ஹரிகிருஷ்ணன், சன் பிரியா ஆகியோரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தியபோது ஹரிகிருஷ்ணனுக்கு உணவு வழங்கப்பட்டது. அவற்றை வேண்டாம் என்று கூறிய ஹரிகிருஷ்ணன், சன் பிரியா சாப்பிடாம நான் எப்படி சாப்பிட முடியும் என்றார். கழுத்தில் டாட்டூ ஹரிகிருஷ்ணன் தனது வலது பக்க கழுத்து மேல்பகுதியில் காது ஓரத்தில் எச்.எஸ்.பி என டாட்டூ குத்தி உள்ளார். எச் என்றால் ஹரிகிருஷ்ணன். எஸ்பி என்றால் சன் பிரியா என்று இதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

The post தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் இரும்பு வியாபாரி கொலை; ஆந்திராவில் உள்ள கார் டிரைவரை பிடிக்க போலீஸ் தனிப்படை விரைவு appeared first on Dinakaran.

Tags : Iron ,Andhra Pradesh ,Perambur ,Annanagar RTO ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...