×

கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அரியானா நடிகையை படுகொலை செய்து உடலை சொகுசு காரில் அடைத்த கொடூரம்: ஓட்டல் அதிபர் உட்பட 3 பேர் கைது; திடுக் தகவல்கள்

அரியானா: அரியானாவை சேர்ந்தவர் திவ்யா பகுஜா (27). நடிகையான இவர் குருகிராம் செக்டார் 7ல் உள்ள பல்தேவ் நகரில் வசித்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி கடோலி என்ற கொலை குற்றவாளி என்கவுன்டர் மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திவ்யாவை அரியானா போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் திவ்யாவின் தாய் மற்றும் 5 போலீசாரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் விரேந்திர குமார் என்ற கொள்ளை கூட்ட தலைவனின் திட்டத்தின்படியே கடோலியை அரியானா போலீசார் என்கவுண்டர் செய்ததும், அதற்கு திவ்யா உதவி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பகுஜா சிறையில் அடைக்கப்பட்டார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர், ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் குருகிராம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த பகுஜா நேற்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லாததால் அவரது சகோதரி நைனா, போலீசில் புகார் கொடுத்தார். அப்போது கடைசியாக, ஓட்டல் முதலாளி அபிஜீத் சிங்குடன் பகுஜாவை பார்த்ததாக கூறியிருந்தார். இதையடுத்து பகுஜாவை கண்டுபிடிக்கும் முனைப்பில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.

அதன்படி ஓட்டலில் சோதனை செய்தபோது, மாடிபடிகளில் ரத்த கறை படிந்திருந்தது தெரியவந்தது. இது போலீசாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் போர்வையால் சுற்றப்பட்ட ஒரு சடலத்தை மாடிபடிகள் வழியாக இழுத்து சென்று வெளியே நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரில் ஏற்றியது பதிவாகியிருந்தது. இதையடுத்து ஓட்டல் முதலாளி அபிஜீத் சிங்கை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், தனது அந்தரங்க புகைப்படங்களை பகுஜா எடுத்து வைத்து கொண்டு மிரட்டியதாகவும், இது தொடர்பான வாக்குவாதத்தில் பகுஜாவை கொலை செய்து சடலத்தை காரில் கொண்டு சென்று மறைத்ததாக தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்து ஓட்டல் முதலாளி அபிஜீத் சிங் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள பகுஜாவின் உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக உதவி கமிஷனர் குமார் கூறினார்.

The post கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அரியானா நடிகையை படுகொலை செய்து உடலை சொகுசு காரில் அடைத்த கொடூரம்: ஓட்டல் அதிபர் உட்பட 3 பேர் கைது; திடுக் தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Ariana ,Divya Bahuja ,Paldev Nagar, Sector 7, Gurugram ,Gadoli ,Dinakaran ,
× RELATED டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு:...