×

திருமங்கலம் மேம்பாலம் அருகே 12 மாடி கட்டிடத்தின் உள்ளே மெட்ரோ ரயில் இயக்க முடிவு: அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன.4: சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.

இந்த நிலையில் 2ம் கட்ட திட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திட்டத்தை, சிஎம்ஆர்எல் கையில் எடுத்துள்ளது.  அதுதான் 12 மாடி கட்டிடத்தின் உள்ளே டிரைவர் இல்லாமல் இயங்கப் போகும் மெட்ரோ சேவை. இதற்காக, சென்னை திருமங்கலத்தில் 12 மாடி கட்டிடம் கட்டப்பட்டு, மெட்ரோ ரயில்கள் 3வது மாடியில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக திருமங்கலம் மேம்பாலம் அருகே ஒரு இடத்தை கையகப்படுத்தி, இதற்கான செலவுகளை 2ம் கட்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டு, சிஎம்ஆர்எல் மாநில அரசிடம் நிதி கோரவும் உள்ளது. இதற்கான கருத்தியல் வடிவமைப்பும் தற்போது வெளிவந்துள்ளது. ஸ்டேஷன்களுடன் சேர்த்து சொத்து மேம்பாடு செய்யப்படும் மற்ற இடங்கள் கோயம்பேடு மற்றும் திருமயிலை. இங்கு 12 மாடி கட்டிடத்தில் ரயில் நிலைய நுழைவாயில் மட்டும் வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டிருக்கும். கட்டிடங்கள், மக்கள், செயல்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டு வருவதற்காக மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள சொத்துக்களை மேம்படுத்தும் மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும்,

இதற்காக மாநில அரசிடம் நிதி கோர உள்ளதாகவும் சிஎம்ஆர்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக திருமங்கலம் மேம்பாலம் அருகே முன்பு 3 வீடுகள் இருந்த 45 மீ., நீளமுள்ள நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளதாகவும், திருமங்கலத்தில் உள்ள மேம்பாலத்திற்கு மேலே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துடன் ஒருங்கிணைந்த நடைபாதையை உருவாக்க எங்களுக்கு விருப்பம் இருந்தது. ஆனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியிருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு தீர்வாக ஒரு ஏஜென்சியை நியமித்து எவ்வாறு நிலங்களை வாடகைக்கு எடுப்பது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், தற்போது மெட்ரோ முதற்கட்ட திட்ட நீட்டிப்பில், விம்கோ நகர் டிப்போவுடன் ரயில் நிலையத்திற்கு மேலே 20 மாடி கட்டிடத்தையும், 4 அடுக்கு கார் பார்க்கிங்கையும் திட்டமிடுகிறது. இதுபோன்ற வசதிகள் பல இடங்களில் உள்ளன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிஎம்ஆர்எல் திட்டமிட்டபடி 12 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டால் இது நிச்சயமாக வியந்து பேசப்படும் ஒன்றாக மாறும்.

பொது பாதை: கோயம்பேட்டில் முதற்கட்ட திட்டத்தின்படி ரயில் நிலையத்தில் கட்டப்படும் 2ம் கட்ட உயர்த்தப்பட்ட ரயில் நிலையத்தைச் சுற்றி காலி மனைகள் உருவாக்கப்படும். ஆவடிக்கு 3வது வழித்தடத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு, 3 வழித்தடங்களையும் இணைக்கும் பொதுவான பாதை அமைக்கப்படும். திருமயிலையில், குறைந்தபட்சம் 5 நுழைவு/ வெளியேறும் கட்டமைப்புகளில் ஒன்று புதிய அடுக்குமாடி கட்டிடத்தில் இருக்கும்.

சீனாவை போல்…
சீனாவில் உள்ள 19 மாடி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 6வது மாடியில் மெட்ரோ நிலையம் உள்ளது. நாக்பூரில் உள்ள மெட்ரோ நிலையத்திற்கு மேலே 15 மாடி நட்சத்திர ஓட்டல் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 3 மாடி வாகன நிறுத்துமிடமும் கட்டப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பலர் இந்த இடத்தில் செல்பி எடுத்து செல்கின்றனர்.

The post திருமங்கலம் மேம்பாலம் அருகே 12 மாடி கட்டிடத்தின் உள்ளே மெட்ரோ ரயில் இயக்க முடிவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro ,Thirumangalam Bhabhalam ,Chennai ,Chennai Airport ,Vimco Nagar ,Central- Parangimalai ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3...