×

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.1.2024) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் – தாம்பரம் சானடோரியம், ஹோம் சாலையில் 18 கோடி ரூபாய் செலவில் 461 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பணிபுரியும் இடங்களில் பெண்களின் பங்களிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பெண்கள் கிராமங்கள், சிறு நகரங்களிலிருந்து பெருநகரங்களுக்கு பணிநிமித்தம் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவ்வாறு பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்திற்கு அருகில் தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அவசியத் தேவையாக உள்ளது. பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் தேவைகளை உணர்ந்த தமிழ்நாடு அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து வருகிறது.

பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கிட “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்” தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு, புதிய விடுதிகளை கட்டுதல், பழைய விடுதிகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம் – கூடுவாஞ்சேரி, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் 226 மகளிர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்கள், சென்னை – அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 13.07.2023 அன்று திறந்து வைக்கப்பட்டு, செயல்பட்டு கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் தாம்பரம் சானடோரியம் பகுதியில், நான்கு தளங்களில் 18 கோடி ரூபாய் செலவில் 461 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

The post தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Tambaram Sanatorium ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,Mr. ,Tamil Nadu Working Women's Hostels Corporation ,Department of Social Welfare and Women's Rights ,Chengalpattu District ,Tambaram ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...