×

மூணாறில் தொழிலாளர்கள் பீதி சினைப்பசுவை கொன்றது புலி

மூணாறு : மூணாறில் எட்டு மாத சினைப்பசுவை புலி தாக்கி கொன்ற சம்பவம் தொழிலாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம், மூணாறு அருகே தனியார் தேயிலை நிறுவனத்திற்கு சொந்தமான பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான எட்டு மாத சினை பசு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்றது. இரவு நேரமாகியும் பசு வீடு திரும்பாததால் செல்வராஜ் குடும்பத்துடன் தேடி வந்தார்.

நேற்று காலை புதுக்காடு எஸ்டேட்டில் பீல்டு எண்-7ல் பசுவின் உடல் பாதியாக சிதைந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பசுவின் உடல் பாகங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். பசுவை புலி தாக்கிக் கொன்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.

இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘ஓராண்டில் மட்டும் பெரியவாரை எஸ்டேட்டின் பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பசு மாடுகளை புலி தாக்கி கொன்றுள்ளது. சொற்ப வருமானத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களின் பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதர செலவுக்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வரும் நேரத்தில் புலி பசுக்களை தாக்கி கொன்று வருவது தொழிலாளர்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களின் உயிருக்கும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் அரசு பாதுகாப்பு தர வேண்டும்’’ என்றனர்.

The post மூணாறில் தொழிலாளர்கள் பீதி சினைப்பசுவை கொன்றது புலி appeared first on Dinakaran.

Tags : Munar ,Munaru ,Monar ,Selvaraj ,Periyawarai Estate Lower Division ,Munaru, Kerala ,
× RELATED கேரளாவின் மூணாறு பகுதிக்கு...