×

மாதவரம் அருகே காவாங்கரை பகுதியில் உள்ள குளம் சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல், ஜன. 4: மாதவரம் மண்டலம் காவாங்கரை பகுதியில் உள்ள குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை, என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23வது வார்டுக்கு உட்பட்ட காவாங்கரை வள்ளுவர் தெருவில் 2 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. அப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், கரைகள் பலவீனமடைந்துள்ளதுடன், கழிவுநீர், கழிவு பொருட்கள் கலந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

எனவே, இந்த குளத்தை சீரமைக்க வேண்டுமென காவாங்கரை பகுதி மக்கள் மாதவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். அதன்பேரில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து, ஆய்வு செய்து, குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் 6 மாதத்திற்கும் மேல் ஆகியும் எந்தவித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை சரி செய்து, சுற்றி கரைகள் அமைத்து நடைபயிற்சி செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், இந்த குளத்தில் கழிவுநீரை கலப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மாதவரம் அருகே காவாங்கரை பகுதியில் உள்ள குளம் சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kavankarai ,Madhavaram ,Puzhal ,Madhavaram Mandal ,Chennai Corporation ,Kavankarai Valluvar Street ,23rd Ward ,Dinakaran ,
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்