×

திருக்காலிமேடு பகுதியில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சிபுரம், ஜன.4: திருக்காலிமேடு பகுதியில் மண்பாண்ட பொருட்களை தயாரிக்க முடியாமலும், வாழ்வாதாரம் இன்றியும் ெதாழிலாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு உதவ, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு, புது மண்பானை வாங்கி, பொங்கல் வைப்பது தமிழர்களின் மரபு. அந்த அளவிற்கு பொங்கல் பண்டிகையில், முதன்மையானதாக மண்பானை விளங்குகிறது. இந்த மண்பாண்டம் செய்யும் தொழிலை, மண்பாண்ட தொழிலாளர்கள் குலத் தொழிலாக பல தலைமுறைகளை கடந்தும், காலம் காலமாக செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திருக்காலிமேடு பகுதியில் மட்டும் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பாரம்பரியமான மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் செய்கின்றனர். இங்குள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அகல் விளக்கு, போகி பண்டிகையின்போது சிறுவர்கள் அடிக்கும் மேளம், தைப் பொங்கல் விழாவுக்கு தேவையான மண்பானை தயாரித்து வியாபாரம் செய்வது மட்டும் தான், அவர்களது வாழ்வாதாரமாகவே விளங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த பல வருடங்களாக மண்பாண்டங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களான களிமண்ணை ஏரி, குளங்களில் இருந்து எடுப்பதற்கு, தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், மண்பாண்ட தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் மூட்டைகள் மூலம் திருட்டுத்தனமாக களிமண்ணை எடுத்து வந்து, பாரம்பரியமான மண்பானை, அகல் விளக்கு உள்ளிட்டவற்றை தயாரித்து, விற்பனை செய்வது வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.மேலும், திருமணம் முதல் இறப்பு வரைக்கும் மண்பாண்ட பொருட்கள் தேவைப்படுகிறது. காலம் காலமாக கலாச்சாரத்தில் ஒன்றாக இருக்கக்கூடிய மண்பானை தயாரிக்கும் தொழில் நாளுக்கு நாள் பின்நோக்கி செல்கிறது. இதில், பல ஆண்டுகளாக நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு, 2 யூனிட் களிமண் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும், மண்பாண்ட தொழிலாளர்களின் துயரத்தை போக்கும் வகையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post திருக்காலிமேடு பகுதியில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirukalimedu ,Kanchipuram ,Thirukalimedu ,Pongal festival ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...