×

அதானி குழும மோசடி விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை: 3 மாதத்தில் விசாரணையை முடிக்க செபிக்கு உத்தரவு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: அதானி தொடர்பான வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற முடியாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான மீதமுள்ள விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என செபிக்கு உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் கணக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையால் இந்திய பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் வீழ்ச்சியடைந்ததுடன், சர்வதேச அளவிலும் பாதிப்புகளை சந்தித்தது. நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உட்பட நான்கு பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில், “அதானி குறித்து ஹிண்டன்பெர்க வெளியிட்ட அறிக்கையை செபி (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) விசாரிக்காமல், சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, அதானி தொடர்பான விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில், ஓ.பி.பட், நீதிபதி ஜே.பி.தேவ்தத், நந்தன் நிலக்கனி, கே.வி.காமத், சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய ஆறு பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது.

இந்த குழுவானது, ”செபி விதிகளின் எஸ்:19 என்பது மீறப்பட்டுள்ளதா, பங்கு விலையில் ஏதேனும் கையாடல் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி விரிவாக விசாரணை நடத்தி சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்பித்து இருந்தது. இந்த வழக்கில் அனைத்து கட்ட விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த நவம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அதானி குழும மோசடி தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் நேற்று வழங்கினர்.

அதில், ”இந்த விவகாரத்தில் ஆறு பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு வழங்கிய அறிக்கையின்படி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதில் செபி அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் நேரடியாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. குறிப்பாக ஹிண்டென்பர்க் விவகாரத்தில் செபியிடம் இருந்து சிறப்பு விசாரணை குழுவுக்கு விசாரணையை மாற்ற எந்த முறையான காரணமும் இல்லை. இந்த வழக்கை பொறுத்தமட்டில் செபியின் அதிகார வரம்புக்குள் தலையிட வேண்டாம் என்ற வாதங்களை நீதிமன்றம் ஏற்கிறது. மேலும் அதானி தொடர்பான 24 விவகாரங்கள் குறித்து செபி விசாரித்து வருகிறது.

அதில் 22ல் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு விசாரணைகளையும் செபி அமைப்பு அடுத்த மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும். குறிப்பாக பங்குசந்தை தொடர்பாக செபியின் தற்போதைய கட்டுப்பாட்டு விதிமுறைகளில் எந்த விதத்திலும் குறைபாடோ அல்லது சட்ட விரோதமோ இல்லை. மேலும் இந்த வழக்கில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்று மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் ஆராய முடியும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட அளவே செபியின் அதிகார வரம்புக்குள் நாங்கள் தலையிட முடியும்.

இதைத்தவிர இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாத ஒரு செய்தி நிறுவனம் அதாவது ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கையை ஆதாரமாக எடுத்துகொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. இருப்பினும் ஹிண்டன்பெர்க் நிறுவன அறிக்கை விவகாரத்தில் ஒன்றிய அரசும், செபியும் இணைந்து தேவைபடும் பட்சத்தில் விசாரணை மேற்கொள்ளலாம். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே பத்திரிகை நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையை, ஆய்வுகள் இல்லாத மற்றும் ஆதாரமற்ற அறிக்கை ஆகியவற்றை நம்பி மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது.

அதனால் இந்த விவகாரத்தில் நிபுணர் குழு உறுப்பினர்கள் முரண்பாடு தொடர்பானவை உட்பட மனுதாரர்கள் கோரிக்கை மற்றும் அவர்களது தரப்பு வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது. எனவே செபியிடம் இருக்கும் விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு (எஸ்.ஐ.டி) மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால் அதானி தொடர்பான வழக்கை செபியே தொடர்ந்து விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், செபிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post அதானி குழும மோசடி விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை: 3 மாதத்தில் விசாரணையை முடிக்க செபிக்கு உத்தரவு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Adani Group ,SEBI ,Supreme Court ,NEW DELHI ,Adani ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...