×

பஞ்சமி நிலத்துக்கான ஆவணங்கள் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பாஜ புகார் கொடுத்துள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை தரப்பில் வாதம்

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ”முரசொலி”யின் அறக்கட்டளை சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் 1.825 சதுர அடியில் உள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜ மாநில நிர்வாகி சீனிவாசன் 2019ல் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனவும் கூறி முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில், முரசொலி சொத்து மாதவன் நாயர் என்கிற நில உரிமையாளரிடம் இருந்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டது. 1974 முதல் அந்த நிலத்தின் உரிமை 83 ஆண்டாக முரசொலி அறக்கட்டளை வசம்தான் உள்ளது. சென்னையில் பஞ்சமி நிலமே இல்லை என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவே பேரவையில் அறிவித்திருந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை சகித்து கொள்ள முடியாமல் பாஜ இந்த புகாரை அளித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைத்துள்ளதாக கூறி விசாரணை நடத்த வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யாமல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்த பாஜவை சேர்ந்த ஆர்.சீனிவாசன் பட்டியல் இனத்தை சேராதவர். புகார் மீது அதே கட்சியை சேர்ந்த பட்டியலின ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணைக்கு ஏற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றம்சாட்டுவதால் தமிழக அரசு தரப்பை இந்த வழக்கில் இணைக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்பதற்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளன. ஒரு மாநிலத்திலிருந்து வரும் புகாரை அதே மாநிலத்தை சேர்ந்தவர் விசாரிக்க முடியாது என்கிற விதியை மீறி தங்களுக்கு எதிரான புகாரை எல்.முருகன் விசாரணைக்கு ஏற்றதே தவறு. பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போதுதான் தேசிய பட்டியலின ஆணையம் தலையிட்டு தீர்வு காண முடியும்.

அந்த நிலத்தின் தன்மையை குறித்து முடிவு எடுக்க முடியாது. உரிமையியல் நீதிமன்றத்தில்தான் இது தொடர்பாக வழக்கு தொடர முடியும். உரிமையியல் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தான் தீர்வு காண முடியும். ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. புகார்தாரர் எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. வெறும் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி ஆணையம் உத்தரவிட முடியாது. மாநில அரசு இது பஞ்சமி நிலம் இல்லை என்று கூறிவிட்டால் ஆணையத்தின் முடிவு காணாமல்போய்விடும். நிலத்தின் தன்மை குறித்து ஆணையம் முடிவெடுக்க முடியாது என்று வாதிட்டார்.

தேசிய பட்டியலின ஆணைய தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பஞ்சமி நிலம் குறித்த புகாரைத்தான் விசாரிக்க வேண்டும் என்று விசாரணை மட்டுமே நடத்தப்படுகிறது. சொத்தின் மீதான உரிமை யாருக்குள்ளது என்றும் தீர்மானிக்கும் வகையில் நீதிமன்றத்தின் பணியை ஆணையம் செய்யாது என்றார். இதையடுத்து, முரசொலி நிலம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உள்ள வருவாய் துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளை (இன்று) தொடரும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

The post பஞ்சமி நிலத்துக்கான ஆவணங்கள் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பாஜ புகார் கொடுத்துள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை தரப்பில் வாதம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Panchami ,Murasoli Trust ,Madras High Court ,CHENNAI ,DMK ,Murasoli ,12 Ground ,Kodambakkam, Chennai ,Srinivasan ,National Listing Commission ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...