×

ஜெயலலிதா நினைவிடம் கட்டிய சி.எம்.கே. குழுமத்தில் 2வது நாளாக சோதனை: அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு சீல் வைப்பு

* கணக்கில் வராத ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சென்னை: ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு சி.எம்.கே குழுமம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர்களாக சி.கே.வெங்கடாசலம், சி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். தொடர்ந்து சி.எம்.கே. ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் தொடங்கினர். அதன் பிறகு சி.எம்.கே.டிரேடிங் நிறுவனம் கிரீன் பில்ட் ஹவுசிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. சி.எம்.கே. குழுமத்தின் கட்டுமான நிறுவனம் தான் ஜெயலலிதாவின் நினைவிடத்தை கட்டியது. அதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான அரசு ஒப்பந்தங்களை எடுத்து பல கட்டிடங்களை இந்த நிறுவனம் தான் கட்டியுள்ளது.இந்நிலையில் சி.எம்.கே. குழுமம் 2023-24 நிதியாண்டில் வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சி.எம்.கே. குழுமத்திற்கு சொந்தமான ஈரோடு, சேலம், மற்றும் சென்னை என தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சி.கே.எஸ் குழுமத்திற்கு சொந்தமான சென்னை ஷெனாய் நகரில் உள்ள அலுவலகம், அண்ணாநகர் 10வது மெயின் ரோட்டில் உள்ள வீடு, அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனம் மற்றும் சி.எம்.கே. நிறுவன உரிமையாளர்களான வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது.இந்த சோதனை 2வது நாளாக இரவு வரை நடந்த சோதனையில் சி.எம்.கே. குழுமத்தின் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரொக்க பணம், பினாமிகள் பெயரில் உள்ள துணை நிறுவன ஆவணங்கள், பல்வேறு நிறுவனங்களில் பங்கு முதலீட்டு ஆவணங்கள் ைகப்பற்றப்பட்டது. மேலும், அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதோடு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கி கணக்கு விபரங்களை அதிகாரிகள் நேற்று மாலை முதல் கணக்காய்வு செய்து வருகின்றனர்.

The post ஜெயலலிதா நினைவிடம் கட்டிய சி.எம்.கே. குழுமத்தில் 2வது நாளாக சோதனை: அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : C.M.K. ,Jayalalitha ,Annanagar ,Chennai ,CMK Group ,Erode district ,CK Venkatachalam ,CK Balasubramanian ,C.M.K. Project Pvt Ltd ,Jayalalithaa ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது