×
Saravana Stores

1000 பேரை ஒரே நாளில் நீக்கிய பே டிஎம் வேலைகளை காவு வாங்கும் ஏ.ஐ: ஐடி நிறுவனங்களில் அதிகரிக்கும் ஆள்குறைப்பு பரிதவிப்பில் இன்ஜினியர்கள்

பே-டிஎம்மின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இது செலவினங்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. புத்தாண்டு பிறக்கும் வேளையில் ஒரே நடவடிக்கையில் ஆயிரம் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து நடு ரோட்டில் நிற்கதியாக நிற்கும் பரிதாபம். இது பே டிஎம் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள். இது இந்தியாவில் ஒரே நேரத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டது ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் நடந்த மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும்.

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்(ஐடி) ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. பெரும்பாலும் பொறியியல் பட்டம் பெற்றவர்களே இந்த துறையில் வேலை பார்த்தனர். கை நிறைய சம்பளம், வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்ததால் ஏராளமானோரின் கனவு துறையாக ஐடி நிறுவனங்கள் இருந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து ஆள் குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது.

குறிப்பாக, கடந்த 2020ல் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட சமயங்களில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள், ஒர்க் பிரம் ஹோம் என்ற முறையில் வீடுகளில் இருந்த படியே கணினி மூலம் தங்கள் வேலையை பார்த்தனர். அந்த சமயத்தில் ஐடி துறையினருக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.ஆனால் கொரோனாவுக்கு பிறகு ஐடி நிறுவனங்களுக்கு நிதி வரவு உள்பட பல பிரச்னைகள் ஏற்பட்டன. இதை சமாளிக்க நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த நிலையில், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கடந்த ஆண்டில் களமிறங்கியது. பல துறைகளில் ஏஐ அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால் பெரும்பாலான நிறுவனங்களில் ஆட்களின் தேவை குறைந்து வருகிறது. விளைவு, ஐடி நிறுவனங்கள் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த ஏஐ தான் இப்போது 1000 பேரின் வேலையை காவு வாங்கி உள்ளது.

கடந்த 2023ம் உலக அளவில் இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முழுவதும் பணிநீக்கங்களில் அதிகபடியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான் முன்னணியில் உள்ளன. நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து நீக்கியுள்ளன. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைமை உள்ளிட்ட பல காரணங்களால் ஸ்டார்ட் அப் மற்றும் ஐடி நிறுவனங்கள் தங்களுடைய உத்திகளை மறு ஆய்வு செய்து வருகின்றன. இதனால் 2024லும் ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு தொடரவே அதிக வாய்ப்பு இருப்பதாக மனித வள மேம்பாட்டுதுறை வல்லுநர்கள் அபாய சங்கு ஊதுகின்றனர். இது தற்போது, படித்து முடித்துள்ள, இறுதியாண்டு படிப்பில் உள்ள இளைஞர்களுக்கு கசப்பான செய்தி. அவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க தனியார் துறையுடன் இணைந்து ஒன்றிய அரசு தேசிய அளவில் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

* இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

* பே- டிஎம் நிறுவனத்தில் கடந்த மாதம் 1000 பேரையும் நீக்கப்பட்டனர். இதையும் சேர்த்து கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 2,141 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

* டன்சோ நிறுவனத்தில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 450 பேர் வேலை இழந்துள்ளனர்.

* ஷேர்சாட் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் 600 பேருக்கு வேலை நீக்க நோட்டீஸ் கொடுத்துள்ளது.

* நிதி நெருக்கடியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில் இந்தியாவில் ஒரு லட்சம் யூனிகார்ன்கள், 2 மில்லியன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் திறன் உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் உள்ள ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன. இதனால் செலவு மற்றும் முதலீட்டை குறைக்கும் விதத்தில் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 3 ஆயிரம் கோடி டாலரை ஈர்த்தன. 2022ல் 2 ஆயிரம் கோடியாக சரிந்து 2023ல் 1500 கோடி கூட தாண்டாது என்று கூறப்படுகிறது. இவை நாட்டில் இருக்கும் நிதி நெருக்கடியை குறிப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் 98 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. 2 ஆண்டுகளில் இந்நிறுவனங்கள் 90,000 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.

* வேலை நீக்கம் செய்த நிறுவனங்கள்

* அசென்ஞ்சர் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 19,000 பேரை பணியில் இருந்து நீக்க போவதாக அறிவித்துள்ளது. தற்போதைய ஆள் குறைப்பு நடவடிக்கையில் இந்த நிறுவனம் தான் அதிகளவில் அதிகமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது என தெரியவந்துள்ளது.

* ஐபிஎம் கார்ப் நிறுவனம் தங்களுடைய வருவாயில் ஏற்பட்ட இழப்பு காரணமாக 3,9000 பேரை நீக்கபோவதாக அறிவித்துள்ளது.

* ஐடி நிறுவனமான காக்னிசன்ட் மொத்தம் 3,500 பேர் அல்லது சதவீத ஊழியர்களை குறைப்பதாக அறிவித்துள்ளது.

* 2023ல் அதிகமான வேலை இழப்பு

கடந்த 2020ல் 12,932 பேரும்,2021ல் 4,080 பேரும்,2022ல் 14,224 பேரும் வேலை இழந்தனர். கடந்த ஆண்டு 16,398 பேர் வேலை இழந்துள்ளனர். இதில் அதிகமாக பெங்களூரு, குருகிராம், மும்பை மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் தான் அதிமானோர் வேலை இழந்துள்ளனர். பே-டிஎம்மின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. கடந்த ஆண்டில் மட்டும் அந்த நிறுவனத்தில் இருந்து மொத்தம் 2,141 பேரை நீக்கியுள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீடுகளும் குறைந்து வருவது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

The post 1000 பேரை ஒரே நாளில் நீக்கிய பே டிஎம் வேலைகளை காவு வாங்கும் ஏ.ஐ: ஐடி நிறுவனங்களில் அதிகரிக்கும் ஆள்குறைப்பு பரிதவிப்பில் இன்ஜினியர்கள் appeared first on Dinakaran.

Tags : PayTM ,One97 Communications ,Pay-TM ,Pay TM ,Dinakaran ,
× RELATED பேடிஎம் நிறுவனம் ₹1 லட்சம் இழப்பீடு...