×

நாடு முழுவதும் 330 தொகுதிகளில் போட்டியிட வியூகம்; 17 மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து போட்டி?..கூட்டணிக் குழு அறிக்கை இன்று கார்கேவிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் 330 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 17 மாநிலங்களில் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுதொடர்பான காங்கிரஸ் கூட்டணிக் குழு அறிக்கை இன்று கார்கேவிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிய பாஜக அரசை வீழ்த்தும் வகையில் வரும் லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. சமீபத்தில் ெடல்லியில் நடந்த ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் தரப்பில் 320 முதல் 330 இடங்களில் போட்டியிட திட்டமிடப்பட்டது. இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, மணிப்பூர், மேகாலயா, மத்திய பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகாண்ட், தெலங்கானா, அருணாச்சல பிரதேசம், சட்டீஸ்கர், அசாம் ஆகிய 17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

கிட்டத்தட்ட 250 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும். இந்த தொகுதிகளில் பாஜக – காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவும். ஒன்பது மாநிலங்களில் உள்ள 75 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது. அதன்படி ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டிற்கு தலா இரண்டு இடங்கள் கிடைக்கும். பிடிபி கட்சிக்கு ஓரிடம் வழங்கப்படும். டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, மற்ற கட்சிகளுடன் தொகுதிகளை பகிர்ந்து கொள்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.

பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் தலா 17 இடங்களில் ஆர்ஜேடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு 4 இடங்களும், இடதுசாரிகளுக்கு 2 இடங்களும் வழங்கப்படும். கோவாவில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடலாம். ஆனால் ஆம் ஆத்மி கட்சி இதில் இடம் கோரலாம். குஜராத்திலும் காங்கிரஸ் 26 இடங்களிலும், ஆம் ஆத்மி ஐந்து இடங்களிலும் போட்டியிடலாம். அரியானாவில் உள்ள பத்து இடங்களில் இரண்டு முதல் மூன்று இடங்களை ஆம் ஆத்மி கேட்கலாம். ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸ் 7 இடங்களிலும், ஜேஎம்எம் 4 இடங்களிலும் போட்டியிட வாய்ப்புள்ளது. ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பொறுப்பை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்க காங்கிரஸ் கூட்டணிக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர்களிடம் ஏற்கனவே கார்கே பேசியுள்ளார். சமீபத்தில் மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் தேசியக் கூட்டணிக் குழு, தனது அறிக்கையை கார்கேவிடம் இன்று சமர்ப்பிக்கவுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில், தொகுதி பங்கீடு தொடர்பாக மற்ற கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறினர்.

The post நாடு முழுவதும் 330 தொகுதிகளில் போட்டியிட வியூகம்; 17 மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து போட்டி?..கூட்டணிக் குழு அறிக்கை இன்று கார்கேவிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Kharkov ,New Delhi ,Congress ,Congressional Coalition Committee ,Union Party Government ,Coalition Committee ,Karke ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...