×

ஓஎம்ஆர் சாலையில் குப்பை எரிப்பதால் மக்களுக்கு சுவாச கோளாறு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: ஓஎம்ஆர் சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பையால் வாகன ஓட்டிகள், குடியிருப்பு வாசிகளுக்கு சுவாசகோளாறு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் வரை 8 கிமீ தூர சாலை உள்ளது. இந்த இடைவெளியில் ஓஎம்ஆர் சாலையில் ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.

பொதுமக்களின் வசதிக்காக ஏராளமான வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்கள், சிறுகடைகள், ஷாப்பிங் மால்களும் உள்ளன. தையூர் ஊராட்சி சார்பில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவு, திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன. ஆனால், சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறும் குப்பைகளை சாலையோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர். குப்பையை தரம்பிரிக்கும் பணி முறையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

சாலைேயாரத்தில் கொட்டப்படும் குப்பை காற்றில் பறந்து, நீர்நிலைகளிலும், வாகனங்களில் செல்வோர் மீதும் படுகின்றன. மேலும் குப்பை தீவைத்து எரிக்கப்படுவதால் அதிலிருந்து எழும் புகையால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதுபோல் சாலையையொட்டி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு போன்ற நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, தையூர் ஊராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தவேண்டும் என்றும், சாலையோரம் குப்பை கொட்டுவதை தடை செய்யவேண்டும் என்றும், தீவைத்து எரிப்போரை கண்டு பிடித்து அபராதம் விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஓஎம்ஆர் சாலையில் குப்பை எரிப்பதால் மக்களுக்கு சுவாச கோளாறு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,OMR ,Kelambakkam ,Tirupporur ,Dinakaran ,
× RELATED கேளம்பாக்கம் அருகே மனைவி கழுத்து...