×

பழனி கோயில் கிரிவல பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: பழனி கோயில் கிரிவல பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் மலைக்கோயிலின் அடிவாரத்தில் கிரிவலப்பாதை உள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கிரிவலப்பாதை மற்றும் கடை வீதிகளில் நிரந்தர கட்டுமானங்கள் மற்றும் தற்காலிக கட்டுமானங்கள் உள்ளன. இதன் காரணமாக பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம், மீண்டும் 5ம் தேதி ஆக்கிரமிப்புகளை பணிகளை தொடங்க உள்ளோம், முற்றிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோயில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.09ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post பழனி கோயில் கிரிவல பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai High Court ,Palani temple ,Madurai ,High Court ,Justice ,Bharathidasan ,Palani ,Arupadai ,Maduraik High Court ,Girival Path ,Dinakaran ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...