×

புழல் சிறையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க செல்போன் தராததால் போலீஸ்காரர்களை தாக்கிய வெளிநாட்டு பெண் கைதிகள்: ஒரு செல்போன், சிம்கார்டு பறிமுதல்

புழல்: புழல்சிறையில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க செல்போன் கொடுக்காததால் ஆத்திர மடைந்து வெளிநாட்டு பெண் கைதிகள் 2 பேர், சிறை உதவி அலுவலர்கள், காவலர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், முதன்மை தலைமை பெண் காவலரின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில் விசாரணை சிறையில் ஒரு செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை புழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பெண் கைதிகள், ‘எங்களுடைய நாட்டிலுள்ள உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவேண்டும். அதற்கு நீங்கள் அனுமதி அளித்து செல்போன் வழங்கவேண்டும்’ என சிறை காவலர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், ‘சிறைத்துறை சார்பில் எந்த அனுமதியும் இல்லை. உங்கள் அறைகளுக்கு செல்லுங்கள்’ என தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பெண் கைதிகளும், புழல் பெண்கள் சிறை உதவி அலுவலர்கள் சுதா, தாரணி, முதன்மை தலைமை காவலர்கள் பானுப்பிரியா, விஜய்ந்தினி, சாவித்திரி, சிறை காவலர் வெண்ணிலா ஆகியோரை ஆபாச வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த பொருட்களை எடுத்து வீசி சரமாரி தாக்கியுள்ளனர். இதில் சாவித்திரி கண்ணில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட செல்போன், ஹான்ஸ், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சிறையில் அடிக்கடி நடமாடுவதாக சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்படி நேற்று சிறை காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கைதிகள் வைத்திருக்கும் உடமைகளை சோதனை செய்தபோது, ஒரு செல்போன், சிம்கார்டு இருந்தது தெரிவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த கைதிகள் தினேஸ்வரன் என்ற தடியா தினேஷ், சசிகுமார், சதீஷ், ரஞ்சித், சேதுராமன், முகமது ரசதுல்லா, ரத்தினகுமார், குமரேசன், ஆனந்த் என்ற லொட்ட ஆனந்த், ரஞ்சித் ஆகிய கைதிகள் செல்போனை பயன்படுத்தி வெளியில் உள்ள நண்பர்களிடம் பேசி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டு பெண்கள் கைதிகள், சிறை உதவி அலுவலர்கள், காவலர்களை தாக்கியது மற்றும் விசாரணை சிறையில் ஒரு செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புழல் சிறையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க செல்போன் தராததால் போலீஸ்காரர்களை தாக்கிய வெளிநாட்டு பெண் கைதிகள்: ஒரு செல்போன், சிம்கார்டு பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : New Year ,Puzhal Jail ,Puzhal ,Dinakaran ,
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!