×

பெருங்களத்தூர் அருகே சாலையோரம் சுற்றித்திரிந்த முதலை குட்டி பிடிபட்டது: வனத்துறையினர் மீட்டனர்

தாம்பரம், ஜன.3: பெருங்களத்தூர் அருகே சாலையோரத்தில் சுற்றித்திரிந்த முதலை குட்டியை வனத்துறையினர் பிடித்து சென்றனர். பெருங்களத்தூர் அருகே சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதிகளில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர் நிலைகளை சுற்றி ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ள நீர்நிலைகளில் பல ஆண்டுகளாக முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் அவ்வப்ேபாது இரவு நேரங்களில் நீர்நிலைகளில் இருந்து வெளியே வந்து குடியிருப்பு வீடுகளில் உள்ள கோழி, வாத்து, நாய்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவது வழக்கமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சிறுவர்கள், பெரியவர்கள் என யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில், வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிய பின்பே முதலைகளை பிடிக்க முடியும் எனக்கூறி வருவதால் தொடர்ந்து முதலைகளை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையினால் பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிந்தன. இதில் நெடுங்குன்றம் ஏரியிலிருந்து சுமார் 8 அடி முதலை ஒன்று ஏரியில் இருந்து வெளியேறி சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஆலப்பாக்கம், வேப்பந்தங்கள் ஏரி அருகே எஸ்எஸ்எம் நகர் செல்லும் சாலையில் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தின் சுற்றுச்சுவர் ஓரத்தில் இருந்த முதலையை கடந்த மாதம் 13ம்தேதி வனத்துறையினர் பிடித்து சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆலப்பாக்கம் பகுதியில் இருந்து எஸ்எஸ்எம் நகர் செல்லும் வழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையில் சுமார் 2 அடி நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று சாலையோரம் உள்ள தடுப்பின் அருகில் இருந்ததை கண்ட சேஷாத்ரி நகர் பகுதி மக்கள் வனத்துறை அதிகாரி வித்யாபதி மற்றும் பீர்க்கன்காரணை காவல் நிலைய ஆய்வாளர் நெடுமாறன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்து கிண்டி வன உயிரின சரக்கத்தினர் முதலைக்குட்டியை மீட்டு கொண்டு சென்றனர். தொடர்ந்து, பெருங்களத்தூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் முதலைகள் அவ்வப்போது பிடிபட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து முதலைகளை பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெருங்களத்தூர் அருகே சாலையோரம் சுற்றித்திரிந்த முதலை குட்டி பிடிபட்டது: வனத்துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Perungalathur ,Tambaram ,Sadanandapuram ,Alappakkam ,Nedungunram ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...