×

மீண்டும் துப்பாக்கி சண்டை மணிப்பூரில் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் தெங்னோபால் மாவட்டத்தில் உள்ள மோரே பகுதியில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 போலீசார் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் ஒருவரும் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட இவர்கள் விமானம் மூலமாக தலைநகர் இம்பாலுக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதேபோல் தவ்பால் மாவட்டத்தில் லிலாங் சிங்ஜாவ் பகுதியில் பைக்கில் வந்த மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபரும் நேற்று உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

தெங்னோபாலின் சவங்பாய் பகுதியில் நேற்று காலை போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீதான தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் விடுவிக்க கோரி உள்ளூரை சேர்ந்த பெண் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் நபர்கள் பாதுகாப்பு படையினர் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். வீரர்களும் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

வெளிநாட்டு கூலிபடையினரா?
மணிப்பூரில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு படை வீரர்களை முதல்வர் பைரன் சிங் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,‘‘மோரே நகரில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மியான்மரை சேர்ந்த வெளிநாட்டு கூலிப்படையினர் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். இவற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

The post மீண்டும் துப்பாக்கி சண்டை மணிப்பூரில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,IMBAL ,TENNOPAL DISTRICT ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...