×

லிட்ச்பீல்டு அபார சதம் ஆஸி. ஹாட்ரிக் வெற்றி

மும்பை: இந்திய மகளிர் அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 190 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதின. முதல் 2 போட்டியிலும் வென்ற ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் லிட்ச்பீல்டு 119 ரன் (125 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் அலிஸா ஹீலி 82 ரன் (85 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 189 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கார்டனர் 30, சதர்லேண்ட் 23, வேர்ஹாம் 11*, அலனா கிங் 26* ரன் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷ்ரேயங்கா பாட்டீல் 3, அமன்ஜோத் கவுர் 2, வஸ்த்ராகர், தீப்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 339 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 32.4 ஓவரில் 148 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மிரிதி மந்தனா 29, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 25, தீப்தி ஷர்மா 25* ரன், பூஜா வஸ்த்ராகர் 14 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் வேர்ஹாம் 3, அலனா கிங், அன்னபெல் சதர்லேண்ட், மேகஅன் ஷுட் தலா 2 விக்கெட், ஆஷ்லி கார்டனர் 1 விக்கெட் வீழ்த்தினர். 190 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. லிட்ச்பீல்டு ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி விருதுகளை தட்டிச் சென்றார்.

The post லிட்ச்பீல்டு அபார சதம் ஆஸி. ஹாட்ரிக் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Litchfield ,Aussies ,Mumbai ,Australia ,India Women ,India ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!