×

2வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை சமன் செய்ய இந்தியா முனைப்பு

கேப் டவுன்: தென் ஆப்ரிக்கா – இந்தியா மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப் டவுனில் இன்று தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் போட்டித் தொடர்களைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்ட்டில் தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப் டவுனில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ரோகித் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. கோஹ்லி, கே.எல்.ராகுல் தவிர்த்து முன்னணி வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறியதே, முதல் டெஸ்ட் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஜெய்ஸ்வால், ரோகித், கில், ஷ்ரேயாஸ் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற சோக வரலாறு தொடர்ந்தாலும், சமன் செய்த திருப்தியுடன் இந்திய அணி நாடு திரும்புமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு ரபாடா, பர்கர், யான்சென் வேகக் கூட்டணியின் சவாலை சமாளிப்பது அவசியம். கேப்டன் பவுமா காயம் காரணமாக விலகிய நிலையில், இந்த போட்டியுடன் ஓய்வு பெற உள்ள தொடக்க வீரர் டீன் எல்கருக்கு தலைமையேற்கும் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் எல்கர் 185 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. அவரை வெற்றியுடன் வழியனுப்ப தென் ஆப்ரிக்க வீரர்களும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

தென் ஆப்ரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி சோர்ஸி, கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரைன் (விக்கெட் கீப்பர்), காகிசோ ரபாடா, நாண்ட்ரே பர்கர், மார்கோ யான்சென், ஸுபேர் ஹம்சா, லுங்கி என்ஜிடி, கேஷவ் மகராஜ், வியான் முல்டர், டிரைஸ்டன் ஸ்டப்ஸ், ஜெரால்டு கோட்ஸீ (காயம்).

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்) கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, ஆர்.அஷ்வின், ஷ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார், அபிமன்யூ ஈஸ்வரன், ஸ்ரீகர் பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.

The post 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை சமன் செய்ய இந்தியா முனைப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Cape ,Town ,South Africa ,Cape Town ,T20 ,Dinakaran ,
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...