×

வரும் 10ம் தேதி முதல் உடனடி முன்பதிவு ரத்து மகரவிளக்கு நாளில் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: சபரிமலையில் நெரிசலை குறைக்க நடவடிக்கை

திருவனந்தபுரம்: சபரிமலையில் நெரிசலை குறைப்பதற்காக மகரவிளக்கு தினமான ஜனவரி 15ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை உடனடி முன்பதிவை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. புத்தாண்டு தினமான நேற்று 85 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடந்து முடிந்த மண்டல காலத்திலும், தற்போதும் கடந்த வருடங்களைப் போலவே சபரிமலைக்கு பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த முறை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தினமும் சராசரியாக 10 மணிநேரத்திற்கு மேல் ஆகிறது.

சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பம்பையில் இருந்தே பக்தர்களை பல இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தி மெதுவாகவே அனுப்பி வைக்கின்றனர். இதனால் பக்தர்களால் நினைத்த நேரத்தில் தரிசனம் செய்து திரும்ப முடியாத நிலை உள்ளது. தரிசனம் செய்ய முடியாமல் பெரும்பாலான பக்தர்கள் பந்தளம், எருமேலி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் இருமுடிக்கட்டை வைத்து விட்டு திரும்பி சென்ற சம்பவங்களும் நடந்தன. இந்தநிலையில் மகரவிளக்கு காலத்தில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள போலீஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி முதல் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.

அதன்படி வரும் 10ம் தேதி முதல் மகரவிளக்கு தினமான ஜனவரி 15ம் தேதி வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. 14ஆம் தேதி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 15ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியும். வழக்கமாக ஜனவரி 10ம் தேதி சபரிமலைக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் மகரஜோதி தரிசித்த பின்னரே திரும்புவார்கள். இதனால் நெரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14, 15 ஆகிய தேதிகளில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. 16 முதல் 20ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்பதால் அந்த நாட்களில் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வரும் 10ம் தேதி முதல் உடனடி முன்பதிவு ரத்து மகரவிளக்கு நாளில் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: சபரிமலையில் நெரிசலை குறைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : 10th ,Makaravilakku day ,Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimalai Ayyappan ,
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?