×

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன குழு ஆகியவை தொடர்பான சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் நாராயணன் உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘‘இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்குகளை முன்னதாக உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு வாரம் விசாரணை நடத்தி பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோரை இனிமேல் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு தான் நியமனம் செய்யும் என்று கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து உச்ச நீதிமன்றத்தினை விலக்கி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம்பெறுவதற்கு ஏற்ப ஒன்றிய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக குடியரசு தலைவர் திரெளபதி முர்முவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன குழு தொடர்பான சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படையான சுதந்திரமான குழு அமைக்கப்பட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Chief Election Commissioner ,of ,India ,Election Commission ,Prashant Bhushan ,Gopal Shankar Narayanan ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...