×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை விவரம்: 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை, தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில் 2018 மே 22ம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் 2022 மே 18ம் தேதி அளித்த அறிக்கையின்மீது, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின் மீது, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது, பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ.5 லட்சம் வீதம், ரூ.65 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

காவல் துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட 93 பேருக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் நிவாரணத் தொகையாக ரூ.93 லட்சம் வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பரத்ராஜ் என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்ததால், அவரின் தாய்க்கு நிவாரணத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் 17 காவல் துறை அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சைலேஷ் குமார் யாதவ், கபில் குமார் சி.சரத்கர் ஆகிய இந்திய காவல் பணி அலுவலர்கள் மகேந்திரன், லிங்கத் திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 2 ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தண்டனை குற்றப்பிரிவின் கீழ், ஒரு உதவி ஆய்வாளர், இரு இரண்டாம் நிலைக் காவலர், ஒரு முதல் நிலைக் காவலர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் நிலைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வருவாய்த் துறை அலுவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை விவரம்: 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை, தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Justice ,Aruna Jagatheesan ,Thoothukudi ,Tamil Nadu Govt ,Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை!