×

பி.எச்.டி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: பி.எச்.டி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் என பாரதிதாசன் பல்லைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. ‘கல்வியில் சிறந்த’ என்ற எந்தப் பட்டியல் எடுத்தாலும், அதில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள்தான் அதிகமாக இடம்பெற்றிருக்கும். 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காகப் போடப்பட்ட விதைதான், இன்றைக்கு வளர்ந்து, கல்வியில் சிறந்த மாநிலமாக, நாம் உயர்ந்து நிற்கிறோம்.

நமது திராவிட மாடல் அரசு, அனைவருக்கும் கல்வி – அனைவருக்கும் கல்லூரிக் கல்வி – அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி என்ற இலக்கோடுதான் சமூகநீதி புரட்சியை கல்வித் துறையில் நடத்தி வருகிறது. ‘‘இன்னார்தான் படிக்க வேண்டும் ’’ என்று இருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் அனைத்துவிதமான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம். தமிழ்நாட்டு மாணவர்களை – படிப்பிலும், வாழ்க்கையிலும் வெற்றியாளராக்குவதற்கு ‘‘நான் முதல்வன்’’ திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

உயர்கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், முதல்வரின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆட்சிப்பணித் தேர்வுகள், திறன்சார்ந்த தேர்வுகளுக்கு தயார் செய்யும்பொருட்டு மதுரையில் ‘‘கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்’’ அமைக்கப்பட்டிருக்கிறது. எனது கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 29 லட்சம் மாணவர்களுக்கும், 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, அனைத்து தரப்பு மாணவர்களும் தொழிற்கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2021-22, 2022-23, 2023-24 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் 28 ஆயிரத்து 749 மாணவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்ந்துள்ளார்கள். இவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்துக் கட்டணம் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு 482 கோடி ரூபாய் செலவிடுகிறது.

இது எல்லாமே தமிழ்நாட்டின் மாணவர் சக்தியை அடுத்தகட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் முயற்சிகள். இன்றைக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம், உலகப் பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலிலும், தேசிய தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்தப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சிலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள், தமிழ் மையம் ஆகிய அனைத்தையும் தொடங்கியது நம்முடைய திராவிட மாடல் அரசுதான் என்பதை பெருமையோடு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

இப்படி உயர்கல்விக்கான அனைத்து உட்கட்டமைப்புகளையும் உருவாக்கியதன் விளைவாகத்தான், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். பி.எச்.டி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். இந்தியாவின் தலைசிறந்த 100 கலை – அறிவியல் கல்லூரிகளாக தேசிய தர வரிசையில் உள்ள 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவின் தலைசிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 15 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

இவ்வாறு பல்வேறு பிரிவுகளில் 146 கல்வி நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் தமிழ்நாடு தேசிய தரவரிசை பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளது. 2023 ஆகஸ்டு நிலவரப்படி, தேசிய தரமதிப்பீட்டு கவுன்சிலின் தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 398 கல்லூரிகளும், 38 பல்கலைக்கழகங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 1,623 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

இவற்றில் 242 மகளிர் கல்லூரிகள். இப்படி ‘‘உயர்கல்வியின் பூங்காவாக’’ தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும் – தமிழ்நாடும் திகழ்கிறது. கல்வியில் சமூகநீதியையும் – புதுமைகளையும் புகுத்துவதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அத்தகைய பல்கலைக்கழகங்களுக்கே சிறப்பான எதிர்காலம் உண்டு. இன்று பட்டம் பெறும் மாணவ கண்மணிகளே, நீங்கள்தான் நாட்டின் எதிர்காலம், சிறந்த அதிகாரிகளாக – தொழில்முனைவோர்களாக நீங்கள் தேர்ந்த துறையில் சிறந்து விளங்குங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post பி.எச்.டி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Trichy ,M.K.Stalin ,Bharathidasan University ,India ,convocation ceremony ,Trichy Bharathidasan University ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...