×

சென்னையில் வரும் 13 முதல் 17ம் தேதி வரை சங்கமம் கலை விழா: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னையில் வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை சங்கமம் கலை விழா நடக்கிறது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: 2023-24 நிதிநிலை அறிக்கையின் போது, சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பை பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையோடு சேர்த்து, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடத்த ரூ.9.90 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக, சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா வரும் 13ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், சுற்றுலா துறை ஆணையர் காகர்லா உஷா, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்தி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, சுற்றுலாத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம், மின்சாரத்துறை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் போன்ற 16 அரசு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளவார்கள். விழாவினை சிறப்பான வகையில் செயல்படுத்த தேவையான ஒத்துழைப்பினை அனைத்து துறைகளும் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் வரையறை செய்யப்பட்ட பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும். சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடர்பான அனைத்து பணிகளையும் சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை வாழ் பொதுமக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களை கண்டு களிக்க ஏதுவாகவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டும் இந்த விழா சென்னையில் வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

The post சென்னையில் வரும் 13 முதல் 17ம் தேதி வரை சங்கமம் கலை விழா: முதல்வர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Sangamam Art Festival ,Chennai ,Chief Minister ,Chennai Sangam Art Festival ,M. K. Stalin ,Tamil Nadu government ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...