×

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக ஜெயலலிதா நினைவிடம் கட்டிய சி.எம்.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: சென்னை, மதுரை உட்பட மாநிலம் முழுவதும் 30 இடங்களில் நடந்தது; கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் பறிமுதல்

சென்னை: வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக ஜெயலலிதா நினைவிடம் கட்டிய சி.எம்.கே. கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் நடந்து வரும் இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னிபாளையம் முத்துகவுண்டர் (எ)குழந்தைசாமி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், சிறு வயதில் ஜவ்வரிசி வியாபாரம் செய்தார். சில ஆண்டுகளிலேயே ஜவ்வரிசி தொழிலில் பெரிய அளவில் உயர்ந்தார். பிறகு ‘சி.எம்.கே’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினார்.

பின்னர் அவரது மகன்களான சி.கே.வெங்கடாசலம் மற்றும் சி.கே.பாலசுப்பிரமணியன் கட்டுப்பட்டில் நிறுவனம் வந்தது. இருவரும் கடந்த 1999ல் சி.எம்.கே. ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் தொடங்கினர். அதன் பிறகு சி.எம்.கே. டிரேடிங் நிறுவனம் கிரீன் பில்ட் ஹவுசிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சி.எம்.கே. புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், டிரினேவா இன்ப்ரா புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என அடுத்தடுத்து நிறுவனங்கள் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் சகோதரர்களான சி.கே.வெங்கடாசலம், சி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சேலம் மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர் மூலம் அதிமுக ஆட்சியின் போது பல முக்கிய அரசு ஒப்பந்தங்களை எடுத்து கட்டுமான பணிகள் பல செய்துள்ளனர்.

குறிப்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை சி.எம்.கே. கட்டுமான நிறுவனம் தான் கட்டியது. பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுமானங்கள், அதேபோல் கேரள மாநிலம் கொச்சினில் கட்டுப்பட்டு வரும் அயக்கர் பவன் மற்றும் தமிழ்நாட்டில் பல அரசு கட்டிடங்களை ஒப்பந்தம் எடுத்து கட்டியுள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களை அதிகளவில் எடுத்த நிறுவனங்களில் சி.எம்.கே. நிறுவனமும் ஒன்று என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சி.எம்.கே. குழுமம் 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டில் தனது வருமானத்தை குறைத்து வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது. சி.எம்.கே. குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் பல நூறு கோடி ஒப்பந்தங்களை எடுத்து பணிகள் செய்து வரும் நிலையில், ஆண்டு வருமானத்தை குறைத்து கணக்கு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து 2024 புத்தாண்டு பிறந்த 2 வது நாளான நேற்று ஒரே நேரத்தில் சி.எம்.கே. குழுமத்திற்கு சொந்தமான தலைமை அலுவலகங்கள், உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னையில் சி.எம்.கே. குழுமத்திற்கு சொந்தமான ஷெனாய் நகரில் உள்ள அலுவலகம், கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் உள்ள அலுவலகம், அண்ணாநகர் 10வது மெயின் ரோட்டில் உள்ள அலுவலகம், அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனம் மற்றும் சி.எம்.கே. நிறுவன உரிமையாளர்களான வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான ஈரோடு, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான கிளை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சி.எம்.கே. குழுமத்தில் இருந்து பல நூறு கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பல கோடி ரொக்க பணம், நகைகள், தமிழ்நாடு, கேரளாவில் பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபால், சென்னை எழும்பூரில் உள்ள பாபு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களிலும் சோதனை நடந்தது. எழும்பூர் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சி.எம்.கே. குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. இந்த சோதனை முடிந்தால் தான் சி.எம்.கே. குழுமம் எத்தனை கோடி ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது என முழுமையாக தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா நினைவிடம் கட்டிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, கோவை நகர், புறநகரில் நேற்று 10 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 17 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தனித்தனியாக காலை முதல் மாலை வரை இந்த சோதனையில் ஈடுபட்டனர். பட்டணம் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், சூலூர் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனர் வீடு, நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் குடியிருப்புகள், காளப்பட்டியில் செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் பம்பு தொழில் செய்யும் நிறுவன உரிமையாளர் ஒருவரின் வீடு, அலுவலகம் என 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.வரி ஏய்ப்பு, பல்வேறு வருவாய் இனங்களை மறைத்தது, போலியான கணக்கு காட்டியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

தொழில் துறை, ரியல் எஸ்டேட் துறைகளில் வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பு அதிகமாக நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களின் வருமானம், தாக்கல் செய்த வரி குறித்து கணக்கெடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சூலூர் பட்டணம் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபர் ராமநாதன். நேற்று இவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் 10க்கும் மேற்பட்ட வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல ராமநாதன் மகன் சொர்ண கார்த்திக் இல்லம், போன்ற இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல்: நாமக்கல்லை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவர், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அரசின் பல்வேறு துறைகளில் டெண்டர் மூலம் ஒப்பந்தம் பெற்று கட்டிடங்களை கட்டி வருகிறது. நேற்று காலை 11 மணியளவில் நாமக்கல்லில் உள்ள சத்யமூர்த்தியின் அலுவலகம் மற்றும் வீட்டுக்கு திடீரென வருமான வரித்துறை அலுவலர்கள் 4 கார்களில் வந்து இறங்கினர். அலுவலகம் மற்றும் வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பும் இந்த கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அதேபோல விருதுநகரில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

The post வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக ஜெயலலிதா நினைவிடம் கட்டிய சி.எம்.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: சென்னை, மதுரை உட்பட மாநிலம் முழுவதும் 30 இடங்களில் நடந்தது; கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : C.M.K. ,Jayalalithaa memorial ,Chennai, Madurai ,CHENNAI ,CMK ,Jayalalitha ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED எடப்பாடி அரசு கொண்டு வந்த ஜெயலலிதா...