×

திருச்சி விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி: திருச்சி விமானநிலைய புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடிக்கு புதிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டார். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சி விமான நிலையத்தை ரூ.1,200 கோடியில் ஒன்றிய அரசு விரிவுப்படுத்தி உள்ளது. புதிய விமான முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும். இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று காலை திருச்சி வந்தார். விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு ‘‘வைக்கம் போராட்டம்’’ குறித்த நூலை அவருக்கு வழங்கினார்.

தொடர்ந்து பிரதமரை கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த வரவேற்பை பெற்றுக்கொண்ட பிரதமர், பின்னர் அங்கிருந்து கார்மூலம் 8.5 கிமீ தொலைவில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்குள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முனைவர் பட்டம் மற்றும் தங்க பதக்கம் பெற்ற 33 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

இந்த விழா முடிந்ததும் பிரதமர் மோடி அங்கிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு காலை 11.50 மணியளவில் வந்தார். உள்ளே நுழைந்ததும் புதிய முனையத்தை பிரதமர் சுற்றிப்பார்த்தார். பின்னர் புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ரூ.19,850 கோடியில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைத்தார்.

அதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் செங்கல்பட்டு முதல் எண்ணூர்- திருவள்ளூர் – பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி வரை 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடாதர்மபுரி ‘மல்டி புராடக்ட்’ பெட்ரோலிய குழாய் திட்டம் என ரூ.9ஆயிரம் கோடியில் முடிவுற்ற திட்டங்களையும், கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சேலம் – மேக்னசைட் சந்திப்பு. ஓமலூர் – மேட்டூர் அணைப்பிரிவில் 41.4 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை – தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரயில்பாதை அமைக்கும் திட்டம், திருச்சி – மானாமதுரை – விருதுநகர் ரயில்பாதை மின்மயமாக்கல், விருதுநகர்- தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை – தென்காசி சந்திப்பு நெல்லை- திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய திட்டங்களையும் பிரதமர் மோடி , நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதேபோல் தேசிய நெடுஞ்சாலை 81ன் திருச்சி- கல்லகம் பிரிவில் 39 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 81ன் கல்லகம்- மீன்சுருட்டி பிரிவின் 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு 4/2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785ன் செட்டிக்குளம் – நத்தம் பிரிவின் 29 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 536ன் காரைக்குடி – ராமநாதபுரம் பிரிவில் 80 கிலோ மீட்டர் இருவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ சேலம்- திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையின் 44 கிலோ மீட்டர் நீளத்துக்கு நான்குவழிச்சாலை ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த சாலை திட்டங்கள் திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்த உதவும். இதேபோல் இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி, கூத்தநாடு, பெங்களூரு, மங்களூரு எரிவாயுக்குழாய்- 2 திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோவை வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம், சென்னை வல்லூரில் தரைவழி முனையத்துக்கான பொதுவழித்தடத்தில் ‘மல்டி புராடக்ட்’ குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் உலக பாரம்பரிய தலமான மாமல்லபுரத்துக்கு சாலை இணைப்பை மேம்படுத்தும் வகையிலும், அத்துடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் வகையிலும் தேசிய நெடுஞ்சாலை 332ஏவில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, எல்.முருகன், மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, எம்பிக்கள் திருநாவுக்கரசர், சிவா, கலெக்டர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் 1.45 மணிக்கு லட்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் (எஸ்பிஜி) மற்றும் தமிழக கூடுதல் டிஜிபி அருண் தலைமையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

* விவசாயிகள் சிறை வைப்பு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு, பாஜ 2019ல் அளித்த வாக்குறுதியின்படி கோதாவரி- காவிரி நதிகளை இணைக்க வேண்டும். நெல், கரும்புக்கு இரு மடங்கு லாபகரமான விலை அளிக்க வேண்டும், விவசாயிகளுக்கு தனிநபர் காப்பீடு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் மோடியிடம் நேரில் அளிக்க டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் 2 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு இருந்தார்.

இதுபற்றி திருச்சி போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அய்யாக்கண்ணு மற்றும் அவரது வீட்டிலிருந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகளை வீட்டுக்குள் வைத்து கேட்டை பூட்டி போலீசார் சிறை வைத்தனர். மேலும் விவசாயிகள் வெளியில் வராத அளவுக்கு அவரது வீடு முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருச்சி விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : TRICHI AIRPORT ,PM ,MODI LAUNCHES ,GOVERNOR ,R. N. Ravi ,Principal ,M.U. K. Stalin ,Trichchi ,Modi ,Trichchi Airport ,Bharatithasan ,University Graduation Ceremony ,Mu. K. Stalin ,Trichy Airport ,PM Modi ,Governor R. N. Ravi ,
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!