×

ஜப்பான் நிலநடுக்கத்தால் 24 பேர் பலியான நிலையில் வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை: நேற்று முதல் இன்று காலை வரை 155 முறை குலுங்கியது

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 24 பேர் பலியான நிலையில், வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் தொடங்கி இன்று காலை வரை ஜப்பானில் 155 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்திற்கு உட்பட்ட கடலோர பகுதியான நோட்டோவில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4.10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 12.51 மணி) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1.2 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியது. அந்த நிலநடுக்கமானது 7.6 ரிக்டர் அளவில் பதிவானது. மக்கள் பெரும் பீதியடைந்தனர். ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஐந்து மீட்டர் உயரத்திற்கு மேல் கடல் அலைகள் எழுந்தது. அதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது’ என்று அறிவித்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அலையின் தீவிரம் குறைத்தது.

நேற்று மதியம் தொடங்கி இன்று காலை வரை 155 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களின் தீவிரமானது 3 முதல் 6.1 வரை இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இன்று காலை நிலவரப்படி இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வாஜிமா நகரில் 24 பேர் பலியானதாகவும், 200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இஷிகாவா மாகாணத்தில் அமைந்துள்ள ஷிகா அணுமின் நிலையத்தில் தீப்பற்றி எரியும் துர்நாற்றம் வீசுவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில், ‘ஷிகா அணுமின் நிலையத்திற்கோ அல்லது பிற அணுமின் நிலையங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என்றார். சுனாமி பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறு பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தியுள்ளார். சேதத்தின் அளவை மதிப்பிடுவதாகவும், யாராவது இறந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஜப்பான் அரசு கூறியுள்ளது. நைகட்டா, டோயாமா, இஷிகாட்டாவில் உள்ள சுமார் 33,500 வீடுகளில் மின்சாரம் சப்ளை இல்லை.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடகோடியில் உள்ள ஹொக்கைடோ தீவு மற்றும் வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால், அவசர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள அவசர ெதாலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளை சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது.

 

The post ஜப்பான் நிலநடுக்கத்தால் 24 பேர் பலியான நிலையில் வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை: நேற்று முதல் இன்று காலை வரை 155 முறை குலுங்கியது appeared first on Dinakaran.

Tags : Japan Earthquake Kills 24 ,North Korea ,Tokyo ,Japan ,Russia ,Ishikawa ,Prefecture ,24 ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...