×

கீரிப்பாறை, காளிகேசத்தில் அமைச்சர் தொடங்கி வைத்த உயர்மட்ட பால பணிக்கு வனத்துறை தடை: கட்டுமானம் தொடங்காமல் நிறுத்தி வைப்பு

நாகர்கோவில்: கீரிப்பாறை, காளிகேசத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்த உயர் மட்ட பால பணிக்கு வனத்துறை திடீர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட மலையோர பகுதிகளில் ரப்பர், கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும் தோட்டங்கள் அதிகமாக உள்ளன. அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான தனியார் எஸ்டேட்டுகளும் உள்ளன. இங்குள்ள ரப்பர் தோட்டங்கள், எஸ்டேட்டுகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் குடும்பம், குடும்பமாக அங்குள்ள மலையோர பகுதிகளில் தான் தங்கி உள்ளனர். இது தவிர காளிகேசம் ஆற்றையொட்டி உள்ள காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகம் வந்து செல்கிறார்கள். சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. மழை காலங்களில் கீரிப்பாறை, காளிகேசம் காட்டாற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் மலையோர கிராம மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிர் பலிகளும் நடந்துள்ளன. குறிப்பாக கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் குடியிருப்பில் இருக்கும் மக்கள் பெரும் பாதிப்படைகிறார்கள். இதே போல் காளிகேசம், மாறாமலை பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆற்றை கடக்க போதிய பாதை வசதிகளும் இல்லாததால் கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை மக்கள், நகர பகுதிகளுக்கு வந்து செல்வதில் சிரமம் உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு, கீரிப்பாறை, காளிகேசத்தில் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கீரிப்பாறையில் சுமார் ரூ.3.50 கோடியிலும், காளிகேசத்தில் ரூ.1.75 கோடியிலும் காட்டாற்றுக்கு மேல் உயர் மட்ட பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு (தோவாளை உட்கோட்டம்) சார்பில் இந்த பணிகள் நடைபெற தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. உயர் மட்ட பாலம் அமைய உள்ள இடம், வனத்துறை பகுதியில் வருவதால் வனத்துறையுடன் இணைந்து இதற்கான ஆய்வு பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது. மண் ஆய்வு, பாறைகளின் உறுதித்தன்மை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை ஏற்று, இந்த பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்தன. கடந்த நவம்பர் 24ம்தேதி, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் இந்த பால பணிகளை தொடங்கி வைத்தனர். காளிகேசத்தில் அமைக்கப்பட உள்ள பாலம் இரண்டு தூண்களுடன், 19.60 மீட்டர் நீளத்திலும், கீரிப்பாறையில் அமைய உள்ள பாலம் நான்கு தூண்களுடன் 16.60 மீட்டர் நீளத்திலும் அமைய உள்ளன. 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களுக்குள் பணிகளை முடிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். ஆனால் தற்போது திடீரென இந்த பால பணிகளுக்கு வனத்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. பாலம் அமைய உள்ள பகுதி வனத்துறையின் கீழ் வருவதாக கூறி, பாலத்துக்கான கட்டுமான பணிகளை கொண்டு செல்லக்கூடாது என கூறி தடை விதித்துள்ளனர்.

இந்த பிரச்சினையில் வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை இடையே மோதல் ஏற்படும் நிலை உள்ளது. வனத்துறையின் அனுமதியுடன் தான் மண் ஆய்வு, பாறைகள் உறுதி தன்மை ஆய்வு நடந்தது. தமிழ்நாடு அரசும் பரிசீலித்து தான் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் பணிகளை தடுப்பதால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே சென்னை, நெல்லை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு சம்பவங்களுக்கு பிறகு நீர் நிலைகள் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கி உள்ள நிலையில் உயர் மட்ட பால பணிகளுக்கு வனத்துறை தடை விதித்து இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கீரிப்பாறை, காளிகேசத்தில் உள்ள தரை மட்ட பாலம் உடைந்து சிதைந்த நிலையில் கிடக்கிறது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் பணிகளை தொடங்கினால் தான் திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க முடியும். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்களுக்குள் பணிகளை ஓரளவு முடித்தால் தான் ஜூன் மாதம் மழை தொடங்குவதற்கு முன் ஓரளவு பணிகள் முடிந்திருக்கும். பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தால், திட்ட மதிப்பீடு அதிகரிப்பதுடன், வரும் மழை காலங்களில் மலையோர கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். மாவட்ட கலெக்டர் உடனடியாக இதில் தலையிட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக, வனத்துறை அமைச்சரை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.

 

The post கீரிப்பாறை, காளிகேசத்தில் அமைச்சர் தொடங்கி வைத்த உயர்மட்ட பால பணிக்கு வனத்துறை தடை: கட்டுமானம் தொடங்காமல் நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Forest department ,minister ,Keeripara ,Kalikesam ,Nagercoil ,Mano Thangaraj ,Keeriparai ,Maramalai ,Thadikarankonam ,Kumari district ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!