×

2019ல் 1 தொகுதியை கைப்பற்றிய நிலையில் பீகாரில் 10 தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்: ‘இந்தியா’ கூட்டணி பேச்சுவார்த்தை சுறுசுறுப்பு

பாட்னா: கடந்த 2019ல் 1 தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ், தற்போது பீகாரில் 10 தொகுதிகளை கேட்பதாகவும், இதற்கு ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் மறுப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, அந்தந்த மாநிலங்களில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஒன்றிணைந்து மகா கூட்டணி என்ற பெயரில் ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த கட்சிகள் யாவும் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிப்பதால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பீகாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் தலா 17 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் போட்டியிட விரும்புகின்றன. மீதமுள்ள 6 தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு வழங்க ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த 6 தொகுதிகளில் இடதுசாரி கட்சிகளுக்கு 2 இடங்களும், காங்கிரசுக்கு 4 இடங்களும் பிரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகள் கேட்டு ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாவும், அதற்கு ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், லோக் ஜன சக்தி கட்சி 6 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு ெதாகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி பங்கீடு முடிந்தது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளான எம்பி சுப்ரியா சுலே அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலுக்கான மகாவிகாஸ் அகாதி கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இன்னும் பத்து நாட்களில் அறிவிப்பு வெளியாகும். டெல்லியில் நடந்த கூட்டத்தில் சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டது’ என்றார்.

The post 2019ல் 1 தொகுதியை கைப்பற்றிய நிலையில் பீகாரில் 10 தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்: ‘இந்தியா’ கூட்டணி பேச்சுவார்த்தை சுறுசுறுப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Bihar ,India ,Patna ,United Janata ,Rashtriya Janata ,Lok Sabha Constituency ,Alliance of Futurists ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மோடியை ஈடி...