×

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை, பனியால் ரூ.10 கோடி உப்பு வர்த்தகம் பாதிப்பு: 50 ஆயிரம் டன் தேக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை, பனி மூட்டத்தால் ரூ.10 கோடி உப்பு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி, ஆனைகுடி, கீழகாஞ்சிரங்குடி, கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, பனைக்குளம், நரிப்பாலம், தேவிப்பட்டினம், சம்பை, முத்துரெகுநாதபுரம், சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம், மாரியூர் தரவை, மூக்கையூர் ஆகிய ஊர்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள், உப்பு சேகரிப்பு மற்றும் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இவைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்தாண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை உப்பள பாத்திகளில் கடல்நீர் பாய்ச்சப்பட்டு உப்பு விளைவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் வரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு தயாரிப்பு அமோகமாக இருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த அக்டோபர் முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும், உப்பளங்களின் கரைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய உப்புகளும் நனைந்து வீணானது. உப்பளத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வந்தது. தற்போது மழை எச்சரிக்கை இருப்பதாலும், மாவட்டத்தில் தொடர்ந்து பனி பொழிவு, மேகமூட்டத்துடன் குளிரான காலநிலை நிலவுவதால் உப்பளங்களில் பணி நடைபெறவில்லை. இதனால், உப்பளத்திற்கு புதிதாக கடல்நீர் பாய்ச்சுதல், பாத்தி கட்டுதல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள், உப்பு சேகரிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், 50 ஆயிரம் டன் உப்பு தேக்கம் அடைந்துள்ளதால் ரூ.10 கோடிக்கு உப்பு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை, பனியால் ரூ.10 கோடி உப்பு வர்த்தகம் பாதிப்பு: 50 ஆயிரம் டன் தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Ramanathapuram ,Valeenokkam ,Tirupullani ,Anaikudi ,Koliakanjrangudi ,Koperimadam ,Thirupalakudi ,Panaikulam ,Narippalam ,Devipatnam ,Sambai ,Muthuregunathapuram ,Sayalkudi ,Mariur ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்