×

தமிழகத்தில் நடைபெறும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு: எடப்பாடி குறித்து புகார்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று திருச்சி வந்த பிரதமர் மோடியை முன்னாள் அதிமுக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக – பாஜ கூட்டணியை முறித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அணியினரை பழிவாங்க இரண்டு பேரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நடந்த சட்டப்போராட்டங்கள் அனைத்திலும் எடப்பாடி வெற்றி பெற்று, கட்சியை தற்போது தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட சில மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், வருகிற மே மாதம் நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கட்சி எடப்பாடி தலைமையில் தனியாக நிற்கப்போவதாக அறிவித்து, கூட்டணி கட்சியான பாஜகவை கழட்டி விட்டுள்ளது. இதனால் டெல்லியில் உள்ள பாஜ மூத்த தலைவர்கள் மற்றும் தமிழக பாஜ தலைவர்கள் எடப்பாடி மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் பிரதமர் மோடி இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்துள்ளாார். பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி இன்று பிற்பகல் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. பிரதமர் மோடி கடந்த முறை தமிழகம் வந்தபோது ஓபிஎஸ்சை சந்திக்க நேரம் ஒதுக்கவில்ைல. அதேபோன்று, ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றபோதும், பிரதமரை நேரில் சந்தித்து பேச அனுமதிக்கவில்லை. தற்போது பாஜ கூட்டணியில் இருந்து எடப்பாடி வெளியேறியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கிய சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருச்சியில் இன்று பிரதமர் மோடியும், ஓ.பன்னீர்செல்வமும் தனியாக சந்தித்து பேசியபோது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன், நான் உண்மையை வெளியே சொன்னால் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் இருந்தார்.

அப்போது, எடப்பாடி செய்த அனைத்து காரியங்களையும் ஓ.பன்னீர்செல்வம் ஆதாரத்துடன் கையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அதிமுக அமைச்சர்கள் பலர் மீது அமலாக்கத்துறை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உள்ளிட்டவைகள் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஒன்றிய அரசு மீண்டும் கையில் எடுத்தால், எடப்பாடி அணி ஆட்டம் கண்டுவிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியிடம் இன்று எடுத்து கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு தனது அணி முழு ஆதரவு அளிக்கும். அது மட்டுமல்லாமல் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகளை பாஜகவுக்கு ஆதரவு அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் ஓபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. அவர் சொன்ன கருத்தை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, தேர்தலுக்கு முன் தமிழகத்தில் பாஜ கட்சியை வளர்க்க சில முயற்சிகளை கண்டிப்பாக எடுப்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மோடி – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேநேரம் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு வர இருக்கும் நாட்களில் பல நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பாக எடப்பாடி – ஓபிஎஸ் அணியினர் நான் பெரியவனா, நீ பெரியவனா என்று போட்டி போட்டு வரும் சூழ்நிலையில், பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post தமிழகத்தில் நடைபெறும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு: எடப்பாடி குறித்து புகார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,PANNIERSELVAM ,EDAPPADI ,Chennai ,Modi ,Trichy ,former ,Chief Minister ,O. Paneer Selvam ,EDAPPADI PALANISAMI ,EDAPADI ,PALANISAMI ,Paneer Selvam ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...