×

டோக்கியோவில் தரையிறங்கிய விமானத்தில் பற்றிய தீ: கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழப்பு!!

டோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவன பயணிகள் விமானம் டோக்கியோவில் தரையிறங்கும் போது கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பற்றியது. பயணிகள் விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் டோக்கியோவில் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது நிலநடுக்க நிவாரண பணிகளுக்காக வந்து நின்று கொண்டிருந்த ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தின் மீது பயணிகள் விமானம் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமானத்தின் பின்பகுதி பற்றிய தீ மளமளவென பரவ தொடங்கியது. விமானத்தின் ஜன்னல்கள் வழியாக வெளியேறிய நெருப்பு விபத்தின் தீவிரத்தை உணர்த்தியது. இறுதியாக மொத்த விமானமும் பற்றி எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது. இதற்கிடையே விமானத்தில் இருந்த 367 பயணிகள் உள்ளிட்ட 379 பேரையும் பாதுகாப்பாக வெளியேற்றி விட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பயணிகள் விமானத்தில் பற்றிய தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் மீட்கப்பட்டு இருக்கும் நிலையில் எஞ்சிய 5 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்க நிவாரண பணிக்கான விமானத்தின் மீது மோதியதால் பயணிகள் விமானத்தில் தீப்பற்றியதா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

The post டோக்கியோவில் தரையிறங்கிய விமானத்தில் பற்றிய தீ: கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tokyo ,Coast Guard ,Japan Airlines ,Japan Airlines… ,Dinakaran ,
× RELATED குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி...