×

தெளிவு பெறு ஓம்: எந்தெந்த வயதில் என்னென்ன சாந்தி (சஷ்டியப்த பூர்த்தி) செய்து கொள்வது?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எந்தெந்த வயதில் என்னென்ன சாந்தி (சஷ்டியப்த பூர்த்தி) செய்து கொள்வது?
– முத்துலட்சுமி, வாலாஜாபாத்.

பதில்: இந்த கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். இது கோயிலில்தான் செய்து கொள்ள வேண்டுமா என்றும் கேட்கிறார்கள். பொதுவாக உலகியல் ரீதியான காரியங்களை அவரவர்கள் இல்லத்தில் செய்து கொள்வதுதான் விசேஷம். கோயில் போன்ற பொது இடங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளை நடத்துவது பெரியோர்கள் காட்டிய வழி அல்ல. நன்கு விவரம் தெரிந்த பெரியவர்கள் பெரும்பாலும், தங்கள் இல்லங்களில் நடத்திக்கொள்வதையே ஆதரிப்பார்கள். வீட்டில் முறையாக நடத்தப்படும் வேள்வி களாலும் மந்திரங்களாலும் வழி பாடுகளாலும் திருமகள் அருள் நிலைத்திருக்கும். இனி எந்தெந்த வயதில் எந்தெந்த கர்மாக்களை செய்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.

1. 55-வது வயது ஆரம்பம் – பீம சாந்தி.
2. 60-வது வயது ஆரம்பம் – உக்ர ரத சாந்தி.
3. 61-வது வயது ஆரம்பம் – சஷ்டி அப்த பூர்த்தி.
4. 70-வது வயது ஆரம்பம் – பீம ரத சாந்தி.
5. 72-வது வயது ஆரம்பம் – ரத சாந்தி.
6. 78-வது வயது ஆரம்பம் – விஜயசாந்தி.
7. 80-வருஷம் 8 மாதம் முடிந்து, உத்திராயண சுக்ல பட்சம் நல்ல நாள் – சதாபிஷேகம்.
8. பிரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்தரனுக்கு புத்திரன் பிறந்தால், அதாவது கொள்ளுப் பேரன் பிறந்தால் செய்து கொள்ள வேண்டியது.
9. 85-வயது முதல் 90-க்குள் – மிருத்யஞ்சய சாந்தி.
10. நூறாவது வயதில் சுபதினத்தில் – பூர்ணாபிஷேகம்.

இவையெல்லாம் இறையருள் பெற பல்வேறு மங்களகரமான மந்திரங்களை ஜெபித்து இயற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள் ஆகும். இதில் பல்வேறு தேவதைகளுக்கான மந்திரங்கள் உள்ளன. மனித வாழ்வில் வரும் இது போன்ற நல்வாய்ப்புகளை விரிவான வழிபாட்டிற்கும், இறையடியார் சேர்க்கைக்கும், தான தர்மங்கள் செய்வதற்கும், உரிய ஒரு வாய்ப்பாக கருத வேண்டுமே தவிர, நம் செல்வம், வசதி, பதவி, ஆடம்பரம் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதி விடக்கூடாது.

? ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?
– கஜேந்திரன், ஆவடி.

பதில்: வீடு கட்டலாம், கிரகப்பிரவேசம் செய்யலாம், அன்னதானம் செய்யலாம், அசையும், அசையா சொத்துக்களை பார்வையிடுதல், வாங்குதல் செய்யலாம், பத்திரம் பதிவு செய்யலாம், ஹோமங்கள் செய்யலாம், புதிய பதவியோ புதிய வேலையோ ஏற்கலாம்.

? ராகு காலம், எமகண்டத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள். சிலர் செய்யவும் செய்கிறார்கள். ஒரு கெடுதலும் வருவதில்லையே?
– பத்மஜா, ராயக்கோட்டை.

பதில்: மழையில் நனைந்தால் சளி பிடிக்கும். மழையில் நனையும் எல்லோருக்கும் சளி பிடிக்கிறதா என்ன? நம்மைவிட பல மடங்கு ஞானம் உள்ளவர்கள் சிலவற்றை விதியாக அமைத்து நம் நல்வாழ்வுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதைப்பின்பற்றுவதும் பின்பற்றாததும் நம்முடைய விருப்பம். நம் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ரயில் நிலையங்களில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து இன்னொரு பிளாட்பாரத்திற்குச் செல்ல, மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை வைத்திருப்பார்கள்.

ஆனால், நம்முடைய மக்கள் அதைப்பற்றிக் கவலைப் படாமல் ரயில்வே டிராக்கிலேயே கடந்து போவார்கள். ஒன்றும் ஆகாது. ஆனால், ஏன் கடக்கக் கூடாது? எதற்கு மேம்பாலமும் சுரங்கப்பாதையும் கட்டி வைத்திருக்கிறார்கள்? அந்த விதியை எடுத்துவிடலாமே? தேவையில்லாமல் கோடியில் செலவு செய்து இவ்வளவு கட்ட வேண்டாமே. காரணம், ரயில்வே டிராக்கை கடப் பதில் ஆபத்து அதிகம் உண்டு என்பதால்தானே கட்டி வைத்திருக்கிறார்கள். அதேதான் ராகு காலத்திலும் எமகண்டத்திலும்.

? மனிதர்களுக்கான பிரச்னையை ஆன்மிகம் தீர்த்து வைக்குமா?
– ரவிகுமார், பொன்னாக்குடி.

பதில்: மகாத்மா காந்தி சொன்னதை அப்படியே கொடுக்கிறேன். ஆன்மிகம் மட்டுமே மனிதர்களுக்கு எழும் அத்தனை பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும். பிரச்னைகள் ஏழாமலும் செய்யும். இன்றைக்கு உள்ள சிக்கல்கள் ஆன்மிகத்தால் வந்த சிக்கல்கள் அல்ல. ஆன்மிகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால் வந்த சிக்கல்கள். மனித குலம் உண்டிக்கும் உடைக்கும் அலையாமல் இருக்க ஒரே வழி ஆன்மிகம் செழிக்க வேண்டும். இல்லையெனில் இந்த லோகாயத அறிவு, எப்படி அடுத்தவரைக் கெடுக்கலாம்? எப்படி வெற்றிகரமான வணிகம் ஆக்கலாம்? எப்படி மேலும்மேலும் பணம் சம்பாதிக்கலாம் என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மனிதன் படைக்கப்பட்ட போதே அவனுக்கான உணவும் படைக்கப்பட்டது. அந்த உணவைப் பெறுவது அவனுக்குள்ள உரிமை. ஆனால், அவர்கள் வாழ்வைச் சொர்க்கமாக உருமாற்றுவதற்கு ஞானிகள் தேவை. அதற்கு வழி காட்டுபவர்கள் தேவை. அதற்கு ஆன்மிகம் தேவை.

? ஞானம் பெறுவதற்கு சாஸ்திரங்கள் தேவையா?
– ஆதிராம், சென்னை.

பதில்: ஒரு விஷயம் பயன்படுமா பயன்படாதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு அவசியம். சாத்திரங்களை மட்டும் படித்தறிவதால் ஞானம் பெறமுடியாது என்பது உண்மைதான். ஆயினும் ஞானம் பெறும் வழியை உணர்த்துவதில் சாஸ்திரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே ஞானத்தைத் தேடுபவர்களுக்கு சாஸ்திரங்களும் அவசியம்.

? வெற்றிகரமான வாழ்க்கையா? திருப்திகரமான வாழ்க்கையா?
– சுபாஷ், விக்ரவாண்டி.

பதில்: வெற்றிகரமான வாழ்க்கையைவிட, திருப்திகரமான வாழ்க்கையே உயர்ந்தது. வெற்றி, பிறரால் தீர்மானிக்கப்படுகிறது. திருப்தி தன்னால் தீர்மானிக்கப்படுகிறது.

? தர்மம் எப்போது போய்விடும்?
– நாகேந்திரன், பழனி.

பதில்: இதற்கு விதுரநீதியில் பலன் இருக்கிறது. பொறாமை வந்தால் தர்மம் போய்விடும் என்கிறார். எப்படி? நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரையில் நாம் தர்மமார்க்கத்தில் இருப்போம். எப்போது பொறாமை வருகிறதோ, உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்குவழிகளை உபயோகிப்போம். எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்துவிடும். அதனால்தான் பொறா (ஆமை) புகுந்த வீடு (மனம்) உருப்படாது என்றார்கள்.

? `அரசமரத்தைச் சுற்றி வா..’ என்கிறார்களே. அது என்ன அரசமரத்திற்கு அத்தனை சிறப்பு?
– கே.கீர்த்தி, முத்தரசநல்லூர்.

பதில்: `மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ (ஸர்வ வ்ருக்ஷாணாம் அஸ்வத்த) என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார். ஒரு அரசமரம் நட்டால் ஒரு ஆண்டு சொர்க்கலோகப் பதவி கிட்டும் என்று, விருஷ ஆயுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரசமரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரசமரத்தைச் சுற்றச் சொல்லியிருப்பதில் மருத்துவக் காரணங்கள் உள்ளன. அரசமரத்தின் அதிக பிராண வாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது, மேலும் புத்திதெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. புத்தருக்கு ஞானம் அளித்த போதிமரம் என்பது ஒரு அரசமரமே.

? சொர்க்கம் நரகம் உண்மையில் இருக்கிறதா?
– தேவநாதன், சிங்காநல்லூர்.

பதில்: புராணங்களில் சொர்க்கம் நரகம் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையோ கற்பனையோ, அது ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையான நரகமும் சொர்க்கமும் நமக்குள்தான் இருக்கிறது. மனமது செம்மையானால் சொர்க்கம்தான். மனம் சரியாக இருந்தால், நரகத்தைக் கூட சொர்க்கமாக்கும். அதே மனம் சரியில்லை என்று சொன்னால் சொர்க்கமே நரகமாகிவிடும். அது நாம் எதை அனுபவிக்கிறோம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதை பொறுத்தது. ஒரு பாசுரம் பாருங்கள்.

`பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே’

ஸ்ரீரங்கம்தான் எனக்கு சுவர்க்கம். நீங்கள் சொல்கிற சுவர்க்கம் எனக்கு வேண்டாம் என்கிறார்.இதை இன்னும் எளிமையாக உலகியலாகச் சொல்லுகின்றேன். குடும்பத்தில் வசதி இல்லை. ஆனால், குடும்பத்தில் உள்ளவர்கள் காலையில் தேநீர் பருகும்போதும் உணவு உட்கொள்ளும் போதும், நன்கு சிரித்துப் பேசி, கலகலப்பாக அரட்டை அடித்து மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் அன்போடு இருக்கின்றார்கள். வீட்டில் வசதி இல்லாத போதும் வீடு சொர்க்கமாகிறது.

இன்னொரு வீடு. அலங்காரம். பெரிய பெரிய சோபாக்கள். விலைமதிப்பு மிக்க தரை விரிப்புகள். ஆனால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. எப்பொழுதும் முகத்தில் இறுக்கம். சிரிப்பே இல்லை. இப்பொழுது வீடு சொர்க்கம் போல தோற்றத்தில் இருந்தாலும், நரகம் தானே. எனவே சொர்க்கமும் நரகமும் நம் மனதில், நாம் வாழும் வாழ்க்கை முறையில் உள்ளது.

? எப்படி இருந்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும்?
– வேல்முருகன், காவேரிப்பட்டினம்.

பதில்: கவியரசு கண்ணதாசன் நான்கு வரிகளில் ஒரு கவிதை பாடி இருக்கிறார் (திரைப்படப் பாடல் அல்ல, கவிதை) அது இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும்.

`காதலில் உறவினில் கலைகளில் உணவினில்
ஈதலில் புரத்தலில் இயற்கையை ரசித்தலில்
வாழ்தலில் பற்று வை; வாழ்க்கையைக் கற்று வை
போவதோர் நாள்வரும், போன பின்னால் இவண்
ஆவதோர் பொருளில்லை அறிவை நீ சத்தியம்
அழுவதேன் துடிப்பதேன் ஐயமேன் அச்சமேன்
எழுவதும் விழுவதும் இயற்கை என்றாறுதல் கொள்
இன்று நீ நாளை நீ என்றும் நீ என்றிரு
நன்று செய் நன்று சொல் நடத்து உன் வாழ்வினை
வாழ்வதே முடிவென வாழ்வினைத்
தொடங்கினால்
நெஞ்சமும் சன்னதி நித்தமும் நிம்மதி’

? தமிழுக்கெனக் கோயில்களில் விழா நடந்திருக்கிறதா?
– ராமசுந்தரம், பண்ருட்டி.

பதில்: நடந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது. திருமங்கையாழ்வார் காலத்தில் நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதமான திருவாய்மொழிக்கு என்று திருவரங்கத்தில் ஒரு விழா நடந்தது. திருமங்கையாழ்வாரே நடத்திவைத்தார். அதற்கு திருவாய்மொழித் திருநாள் என்று பெயர். பெருமாள் தினம் இரவு 100 பாசுரங்கள் வீதம் கேட்பார்.

இதற்காக திரு குருகூரிலிருந்து (பாண்டிய நாட்டில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆழ்வார் திருநகரி) ஆழ்வார் திருவுருவம் பல்லக்கில் எழுதருளப்பட்டு ஸ்ரீரங்கம் வரும். இது பின்னால் மற்ற ஆழ்வார்கள் பாசுரங்களுக்குமாக விரிவு பெற்றது. விரிவு செய்தவர் ஸ்ரீமன் நாதமுனிகள்.மற்ற ஆழ்வார்கள் பாசுரங்களை பிற்பகலில் பெருமாள் கேட்பார். இதற்கு திருமொழித் திருநாள் என்று பெயர். ஆழ்வார்கள் பாடிய தமிழ் பாசுரங்களை ஒரு மண்டபத்தில் பெருமாள் அடியார்களுடன் அமர்ந்து கேட்க வேண்டும் என்று ஏற்பாடு செய்த விழாக்கள் இன்றும் வைகுண்ட ஏகாதசி ஒட்டி முன் பின்பத்து பத்து நாள்கள் நடக்கின்றன. எத்தனை வருடங்களுக்கு முன்பு தெரியுமா?

1200 வருடங்களுக்கு முன். அதுதான் இப்பொழுது பகல் பத்து, இராப்பத்து என்று நடக்கிறது. ஒரு காலத்தில் ஸ்ரீரங்கத்தில் மட்டும் நடந்த இந்த உற்சவம், இப்பொழுது எல்லா வைணவத் திருத்தலங்களிலும் நடைபெறுகிறது. இதைவிட தமிழுக்கு வேறு என்ன சிறப்பு வேண்டும்!

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறு ஓம்: எந்தெந்த வயதில் என்னென்ன சாந்தி (சஷ்டியப்த பூர்த்தி) செய்து கொள்வது? appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Muthulakshmi ,Walajabad ,
× RELATED குதிகால் வலி