×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; புத்தாண்டு தினத்தில் 4 பேர் சுட்டுக் கொலை: 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை தலைதூக்கிய நிலையில், நேற்று புத்தாண்டு தினத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்தீஸ் – குகி ஆகிய இரு பிரிவினரால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தற்போது ஓரளவு மணிப்பூரில் அமைதி திரும்பும் நிலையில், அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்ற மணிப்பூரின் தவுபால் மாவட்டம் லிலோங் சின்ஜாவ் பகுதிக்கு வந்த ஆயுதக் கும்பல், திடீரென அங்கிருந்த உள்ளூர் மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவர்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இருதரப்பு மோதலில் 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால், தவுபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்கிங், பிஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினருடன், உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்மாநில முதல்வர் என்.பிரேன்சிங், துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை; புத்தாண்டு தினத்தில் 4 பேர் சுட்டுக் கொலை: 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Manipur ,New Year's Day ,Imphal ,Maitis ,Kugi ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர்...