×

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு முடிவு..!!

டெல்லி: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டத்தில் விபத்து தொடர்பான விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விபத்தால் மரணம் ஏற்பட்டால் விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் புதிய சட்டத்தால் லாரி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி வட இந்தியாவில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தால் சரக்குப் போக்குவரத்து முடங்கியது. டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெட்ரோல், டீசலுக்கு வடமாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தந்த மாநிலங்களில் வாகன போக்குவரத்தும், எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன.

பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகன ஓட்டிகள் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி ஓட்டுநர்களுக்கு ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார். மத்திய அரசு சார்பில் இன்று இரவு 7 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

 

The post புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Indian ,Justice ,Sanhita ,Dinakaran ,
× RELATED துறைமுகங்களை தனியாருக்கு விற்று ரூ.10,000 கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு