×

பெரியார் பல்கலை. துணை வேந்தருக்கு எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது: சேலம் மாஜிஸ்திரேட் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறியும், அரசு அனுமதி பெறாமலும் பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கினார். அதற்காக அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்ததாக, பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதி பி.தனபால் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறிய மாஜிஸ்திரேட், நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்தது தவறு. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிந்துள்ளதால் சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ்திரேட் எடுக்க முடியாது என வாதிடப்பட்டது. அதற்கு துணைவேந்தர் தரப்பில், புலன் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்கவில்லை. புகாரில் எந்த ஆவணங்களும் இணைக்கப்படவில்லை. இந்த பொய் புகார், உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இடைக்கால ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீவிரமான இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரமும் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ, பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களையோ கேட்காமல் இந்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது எனக்கூறி ஜனவரி 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி துணைவேந்தர் தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post பெரியார் பல்கலை. துணை வேந்தருக்கு எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது: சேலம் மாஜிஸ்திரேட் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Eicourt ,Salem Magistrate ,Chennai ,High Court of Chennai ,Salem Periyar University ,Vice Chancellor ,Jeganathan ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...