×

மதுரையில் கவர்னர் இல.கணேசன் கான்வாய் வழியில் முதியவர் திடீர் தீக்குளிப்பு

மதுரை: மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் செல்லும் வழியில் முதியவர் திடீரென தீக்குளித்ததால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், மணிப்பூர் மாநில கவர்னராக உள்ளார். இவர், மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று பகல் 11.20 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் தங்கு விடுதியில் ஓய்வெடுக்கிறார். விழாவுக்கு செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கவர்னர் இல.கணேசனின் கான்வாய் செல்லும் பகுதியான கே.கே.நகர் வக்பு வாரிய கல்லூரி எதிரில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென தனது உடலில் தின்னரை ஊற்றி தீக்குளித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் ஓடி வந்து, உடல் எரிந்த நிலையில் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவர்னர் இல.கணேசன் கான்வாய் செல்லும் வழியில் தீக்குளித்த முதியவர் யார்? எதற்காக தீக்குளித்தார் என மதுரை அண்ணா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மதுரையில் கவர்னர் இல.கணேசன் கான்வாய் வழியில் முதியவர் திடீர் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Governor Ganesan ,Madurai ,Manipur ,Governor ,Lt. Ganesan ,BJP ,L. Ganesan ,Tamil Nadu ,Chennai ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...