×

நிலநடுக்கத்தால் 48 பேர் பலியான நிலையில், ரன்வேயில் விமானம் தீப்பிடித்தது.. உயிர் தப்பிய 300 பயணிகள் :ஜப்பானில் தொடரும் அதிர்ச்சி!!

டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 48 பேர் பலியான நிலையில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானத்துடன் மோதியதில் தீ பிடித்தது. ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்திற்கு உட்பட்ட கடலோர பகுதியான நோட்டோவில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4.10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 12.51 மணி) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1.2 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியது. அந்த நிலநடுக்கமானது 7.6 ரிக்டர் அளவில் பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று மதியம் தொடங்கி இன்று காலை வரை 155 முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அடங்குவதற்குள், டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்தது. JAL 516 என்ற விமானம் ஷின் சிடோசே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஹானெடா விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்த கடலோர காவல் படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்துள்ளது. இதனால் தீப்பிழம்புடன் தரையிறங்கிய விமானம் மளமளவென எரியத் தொடங்கிய நிலையில் தீயை அணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. விமானத்தின் பின்பக்க பகுதியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 367 பயணிகள் உயிர் தப்பியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

The post நிலநடுக்கத்தால் 48 பேர் பலியான நிலையில், ரன்வேயில் விமானம் தீப்பிடித்தது.. உயிர் தப்பிய 300 பயணிகள் :ஜப்பானில் தொடரும் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Tags : Japan ,Tokyo ,Japan Airlines ,Noto ,Ishikawa Prefecture ,Earthquake ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்