×

எனது தமிழ் குடும்பமே!: புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.. பிரதமர் மோடி பேச்சு..!!

திருச்சி: ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கான வசதிகளை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடையும்:

எனது தமிழ் குடும்பமே; முதலில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். ரூ.20,000 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடையும். புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களால் பயணங்கள் எளிதாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ரூ.20,000 கோடி திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்:

புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தற்போது தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் மக்கள் பயணத்தை எளிதாக்குவதுடன், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று மோடி குறிப்பிட்டார்.

மழை, வெள்ளம் மூலம் அதிக வலிகளை அனுபவித்தீர்கள்:

2023 கடைசி சில வாரங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது. மழை, வெள்ளம் மூலம் தமிழக மக்கள் அதிக வலிகளை அனுபவித்தீர்கள். தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் பலர் உயிரிழந்தனர், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த துயரமான சூழலில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

துயரத்தின் போது மத்திய அரசு துணை நிற்கும்:

உங்களின் ஒவ்வொரு துயரத்திலும், மாநில அரசுடன் மத்திய அரசும் துணை நின்றது, நிற்கும். மழை வெள்ள காலத்தில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதுணையாக இருந்தது. மழை வெள்ளத்தின்போது சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்துள்ளது என மோடி தெரிவித்தார்.

திருச்சி விழாவில் விஜயகாந்த் மறைவு பற்றி மோடி பேச்சு:

திருச்சி விழாவில் விஜயகாந்த், விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு பற்றி பிரதமர் மோடி பேசினார். நாட்டின் உணவு உற்பத்தியை உறுதிசெய்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்தை இழந்துவிட்டோம். திரைத்துறையில் மட்டுமில்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் கேப்டனாக விஜயகாந்த் திகழ்ந்தார்.

சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர் விஜயகாந்த். அனைத்தையும் விட தேசிய நலனையே பெரிதாக மதித்தவர் விஜயகாந்த். விஜயகாந்த்தின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும், மக்களுக்கும் இழப்பு. திரைப்படங்களில் அவரது செயல்பாடு மூலம் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார். விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவும் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது என பிரதமர் கூறினார்.

திருவள்ளுவர், பாரதியாரை குறிப்பிட்டு மோடி பேச்சு:

திருவள்ளுவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களைப் படைத்துள்ளனர். சர் சி.வி.ராமன் போன்ற திறமையாளர்களை இந்த தமிழக மண் உருவாக்கியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் சிறப்பான பங்களிப்பை காணமுடியும்.

தமிழ்நாட்டுக்கு வரும்போது புதிய சக்தி கிடைக்கிறது:

நான் எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறேனோ அப்போதெல்லாம் ஒரு புதிய சக்தியை பெறுகிறேன். இந்தியாவின் கலாச்சார பிரதிபலிப்பாகவே தமிழ்நாட்டை பார்க்கிறேன்.

தமிழை புகழாமல் என்னால் இருக்க முடியாது :

தமிழை புகழ்ந்து பேசாமல் என்னால் ஒருபோதும் இருக்க முடியாது. உலகின் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ் மொழியைப் புகழாமல் நான் இருந்ததில்லை. தமிழ் பண்பாடு, கலாச்சாரம் உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன. திருச்சி நகரம் என்றாலே வளமான வரலாற்று சான்றுகள் ஏராளமானவை உள்ளன. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் உள்பட பல மன்னர்களின் ஆட்சிக்கான சான்றுகள் திருச்சியில் உள்ளன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நவீன கட்டமைப்பில் முதலீடு அதிகரிப்பு :

கடந்த 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்பின் மீது மிகப்பெரிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விரைவான வளர்ச்சியை அடையும்போது இந்திய வளர்ச்சியும் விரைவுபடும். மேக் இன் இந்தியா திட்டத்தின் சிறப்பான தூதுவராக தமிழ்நாடு மாறி வருகிறது.

மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி கொடுத்துள்ளோம்:

மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி அளித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி அளித்துள்ளோம். மாநிலங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.120 லட்சம் கோடி அளித்துள்ளது ஒன்றிய அரசு.

தமிழ்நாட்டுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி அளித்துள்ளோம்:

தமிழ்நாட்டுக்கு இரண்டரை மடங்கு அதிகம் நிதி வழங்கியுள்ளோம். 2014-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் தந்த நிதியை விட தற்போது இரண்டரை மடங்கு அதிகம் நிதி வழங்கியுள்ளோம்.

தலைசிறந்த பொருளாதார நாடு இந்தியா:

உலகின் தலைசிறந்த 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.திருச்சி விழாவில் பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் எனது குடும்பமே என்று தொடங்கி பேசினார்.

ரயில் போக்குவரத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளது:

தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படுவதால் தொழில் வளர்ச்சியடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், வேலூர் ரயில் மூலம் இணைக்கப்படுகிறது.

மீன்வளத்திற்கு என தனி அமைச்சகம்:

சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக மீன்வளத்திற்கு என தனி அமைச்சகம் பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளுக்கு என தனியாக கிஷான் அட்டைகள் கொடுக்கப்பட்டன. விவசாயிகளுக்கு என தனியாக கிசான் அட்டைகள் கொடுக்கப்பட்டன.

சாகர் மாலா திட்டத்தால் துறைமுகங்கள் இணைப்பு:

சாகர் மாலா திட்டத்தின் கீழ் பல துறைமுகங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன; அதனால் வருவாய் பெருக்கம். காமராஜர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை இருமடங்காக அதிகரித்துள்ளது என்று மோடி கூறினார்.

The post எனது தமிழ் குடும்பமே!: புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.. பிரதமர் மோடி பேச்சு..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Trichchi ,Modi ,Trichchi Airport ,Shri Narendra Modi ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...