×

வரலாற்றில் பல மாற்றங்கள், சாதனைகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள்: பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் மாணவர்களுக்கு முனைவர் பட்டங்கள், தங்கப் பதக்கங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி கவுரவித்தார். 1,528 மாணவர்களுக்கு வழங்குவதன் அடையாளமாக 30 பேருக்கு மட்டும் பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். பட்டங்கள் பெறும் மாணவர்கள், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பாரதிதாசன் பல்கலை.யின் 38வது பட்டமளிப்பு விழா சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. பின்னர் பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் வணக்கம் சொல்லி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது பேசிய அவர், எனது மாணவ குடும்பமே என தமிழில் சில சொற்களை கூறினார்.

பட்டமளிப்பு விழாவில் மோடி பேச்சு:

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. பட்டங்கள் பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மிக அழகிய மாநிலம் தமிழ்நாடு:

2024 புத்தாண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இந்த பட்டமளிப்பு விழாவாகும். பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமராக இருப்பதில் மகிழ்ச்சி என்றார்.

தமிழ்நாடு பழம்பெரும் பாரம்பரியம் கொண்டது:

பட்டமளிப்பு என்பது தமிழ்நாட்டுக்கு பழம்பெரும் பாரம்பரியத்தை கொண்டது. சங்க காலத்தில் புலவர்கள் இயற்றிய செய்யுகள், பாடல்கள் அரசர்களால் ஏற்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வுக்கு பிறகு பாடல்களை இயற்றிய புலவர்கள், இலக்கியவாதிகளாக அங்கீகரிக்கப்பட்டனர். சங்க காலத்தில் கடைபிடிக்கப்பட்ட முறைதான் தற்போதும் கல்வித்துறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாபெரும் அறிவுசார் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வருபவர்கள் இன்றைய மாணவர்கள். நாட்டுக்கு புதிய திசை வழியை காட்டும் முக்கிய பணியை நிறைவேற்றுபவை பல்கலைக்கழகங்கள் என மோடி தெரிவித்தார்.

தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது:

இளைஞர்கள் அதிகம் இருக்கும் தமிழகத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக நீளமான கடற்கரை கொண்டது தமிழ்நாடு என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

மாற்றங்கள், சாதனைகளுக்கு மாணவர்கள் காரணமாக இருந்துள்ளனர்:

வரலாற்றில் பல மாற்றங்கள், சாதனைகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள். தங்கப் பதக்கங்களை பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். பல்கலைக்கழங்கள் சிறந்து விளங்கினால் நமது நாடும் சிறந்து விளங்கும். கற்கும் கல்வி அறிவை வளர்ப்பதோடு, சகோதரத்துவம், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பாரதிதாசன் வரிகளை மேற்கொள் காட்டிய பிரதமர் மோடி :

புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசன் பாடல் வரிகளின்படி இந்தியா புதிய உலகம் படைத்து வருகிறது. நாடு தாக்கப்படும் போதெல்லாம் நமது அறிவு செல்வத்தின் அடிப்படை குறிவைக்கப்படுகிறது என்றார்.

விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்வு:

இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் இரட்டிப்பாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவை கல்வியில் சிறந்து விளங்கின. கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் வேகம் மற்றும் திறமைக்கு ஈடாக நாங்கள் பணியாற்றுகிறோம். இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையோடு பார்க்கின்றன என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

பட்டம் பெறுவதுடன் கற்றல் முடிவதில்லை:

பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெறுவதுடன் உங்கள் கற்றல் நின்றுவிடக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிப்பு தேவை:

இங்குள்ள ஒவ்வொரு பட்டதாரியும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிக்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் கற்கும் அறிவியல் உங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிக்கு உதவும். மாணவர்கள் கற்றுக் கொள்ளும் தொழில்நுட்பம் சிக்கலான பல பிரச்னைகளைத் தீர்க்க உதவும். மாணவர்கள் கற்றுக்கொள்ளும் பொருளாதாரம் வறுமையைக் குறைக்க உதவும் என பிரதமர் குறிப்பிட்டார்.

உறுதிமொழி ஏற்கும் மாணவர்கள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

The post வரலாற்றில் பல மாற்றங்கள், சாதனைகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள்: பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Bharatithasan University ,PM Modi ,Trichy Bharatithasan University ,Shri Narendra Modi ,Modi ,Ceremony ,Dinakaran ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை